சமையல் நேரம் குறைய... சுவை அதிகரிக்க... இந்த நுட்பங்களைக் கடைப்பிடியுங்கள்!

Kitchen tips in tamil
Enhance cooking taste...
Published on

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல் சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினால் சமையலை அசத்தலாக செய்யலாம். அதற்கான குறிப்புகள் இதோ:

ஜவ்வரிசி பாயாசம் நீர்த்து போனால் அதில் சிறிதளவு பால் பவுடர் போட்டு கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு எடுத்தால் பாயாசம் கெட்டியாகும்.

உப்புமா வகைகள் செய்யும்பொழுது அதில் சிறிதளவு பாசிப்பருப்பை வேகவைத்த சேர்த்தால் ருசி கூடும்.

சிலர் மோர் நன்றாக புளித்துவிட்டால் அதை மோர் குழம்பு வைக்கலாம் என்று ஒதுக்கிவிடுவார்கள். அதை தவிர்த்து அன்றைய தினம் உறைக்கு ஊற்றிய தயிர் அல்லது மோரில் மோர் குழம்பு வைத்துப் பாருங்கள். சுவையாகவும், கெட்டுப் போகாமலும் நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

வயிறு சரியில்லை என்றால் தயிர் சாதம் தாளிக்கும் பொழுது கடுகுக்கு பதிலாக ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருப்பதோடு அஜீரணத்துக்கும் நல்லது.

கொப்பரைத் தேங்காய் வீட்டில் இருந்தால் அதனுடன் வரமிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு சேர்த்து பருப்புப்பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனை ஆகவும் இருக்கும்.

கோவைக்காய், பாகற்காய், வாழைக்காய் மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரே சீராக நறுக்கி மிளகாய்ப்பொடி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு பிசறி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். கோவைக்காயின் புளிப்பு சுவையும், பாகற்காயின் கசப்பு சுவையும், வாழைக்காயின் துவர்ப்பு சுவையும் சேர்ந்து ருசியை கூட்டும்.

மோர் குழம்பு வைக்கும்போது கொஞ்சம் கடலை மாவுடன், சின்ன வெங்காயம், தனியா, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து தண்ணீர்விட்டு பிசைந்து அதை உருண்டையாக்கி எண்ணெயில் பொரித்து குழம்பில் சேர்க்க ருசி அபாரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மூன்று சுவைகளில் வெள்ளை பூசணிக்காய்: அசத்தலான ரெசிபிகள்!
Kitchen tips in tamil

பாகற்காயை வட்டமாக நறுக்கி அதில் உப்பு ,எலுமிச்சை சாறு, மிளகாய் பொடி கலந்து சிறிது நேரம் விட்டு எண்ணெயில் பொரித்தெடுக்க கசப்பில்லாமல் ருசியாக இருக்கும்.

சில நேரங்களில் தோசை மாவு நன்றாக புளித்துவிடும். அப்பொழுது அதில் ராகி, கம்பு கோதுமை, ரவை மாவுகளை சேர்த்து தோசை வார்க்கலாம் புளிப்பு சமன் ஆவதுடன் சத்தும் கிடைக்கும்.

குலோப்ஜாமூன் மிக்ஸுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து பிசைந்து தடிமனான சப்பாத்திகளாக திரட்டி அதை சிறிய டைமண்ட் வடிவில் வெட்டி நெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான ,வாசனையான பிஸ்கட் கிடைக்கும். இதை மிக்ஸருடன் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் .அப்படியேவும் சாப்பிடலாம்.

சேனைக்கிழங்கை துருவி அதனுடன் ஊற வைத்து அரைத்த கடலை பருப்பு மாவு, அரிந்த வெங்காயம், உப்பு, காரம் சேர்த்து வடை தட்டி போட்டு பொரித்து எடுக்கலாம். குழந்தைகள் ரசித்து சாப்பிடுவார்கள்.

பாவ் பாஜி செய்யும் பொழுது பாஜி மீந்துவிட்டால் அதை நன்றாக கெட்டியாக்கி சுருள வதக்கி அதை பிரட்டிற்குள் வைத்து அதன் மீது வெங்காயம், வெள்ளரிக்காய் வைத்து மூடி ட்டோஸ்ட் செய்து கொடுக்கலாம். வித்தியாசமான சுவையில் அசத்தும்.

தேங்காய் பொட்டுக்கடலை வைத்து சட்னி அரைக்கும்போது பொட்டுக்கடலையை அதிகமாக வைத்தரைத்தால் சட்னியை தண்ணியாக வைத்தால் நன்றாக இருக்கும். தேங்காயை அதிகமாக வைத்தால் தண்ணீரை குறைத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் ருசியாக இருக்கும்.

நெய் சேர்க்க வேண்டிய இனிப்பு வகைகளை செய்யும் பொழுது வெண்ணையை அரைப்பதமாக உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறினால் நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகம என்று வாசனையுடன் ருசியையும் சேர்த்து அள்ளித்தரும்.

இதையும் படியுங்கள்:
ஓவன் இல்லாமல் செய்யக்கூடிய ஈஸியான கேக் வகைகள்!
Kitchen tips in tamil

துவரை, மொச்சை, பச்சை பட்டாணி, ராஜ்மா, சுண்டல் போன்றவை இந்த சீசனில் பிரஷ்ஷாக கிடைக்கும். அவற்றை சமையலில் சேர்க்கும்போது குக்கரில் ஒருமுறை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொண்டு மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் சாப்ட்டாக இருக்கும். மற்ற காய்கறிகளுடன் இவற்றை சேர்த்து சமைக்கும் பொழுது ருசியும் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com