
பெண்கள் முதல் குழந்தைகள்வரை இரும்புசத்து குறைபாட்டினால் அடிக்கடி களைப்பு மற்றும் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதே போல் நகங்கள் உடைவதும் முடி உதிர்தல் ஆகிய பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் இரும்புசத்து கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பாட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இரும்பு சத்து உள்ள மசியல் மற்றும் அல்வா செய்முறை இங்கு..
முருங்கைக்கீரை மசியல்
தேவை:
முருங்கைக்கீரை - அரை கப்
முருங்கை பூக்கள் - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - பத்து
தக்காளி - இரண்டு
பூண்டு - ஐந்து பல்
சாம்பார் தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு
கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு சீரகம் -தலா 1/4 டீஸ்பூன் (தாளிக்க) பெருங்காயத்தூள் - ரெண்டு சிட்டிகை காய்ந்த மிளகாய் - இரண்டு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பருப்பு வகைகளைக் கழுவி சில நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் ஊறிய பருப்பு வகைகள் ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக்கீரை மற்றும் பூ சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சாம்பார்தூள், தேவையான உப்புடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி ஐந்து அல்லது ஆறு விசில் விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிவதும் திறந்து எடுத்து அதே நீருடன் மத்தினால் நன்கு மசிக்கவும். கடைவது சிறப்பு.
வாணலியில் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை பொருட்களை தாளித்து கடைந்த மசியலில் சேர்க்கவும். இந்த பருப்பு கீரை மசியல் குழந்தைகள் முதல் பெண்கள்வரை முழு ஊட்டச்சத்துடன் இரும்புச் சத்தையும் முழுமையாக அளிக்கும்.
பீட்ரூட் அல்வா
தேவை:
பீட்ரூட் துண்டுகள் - ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
நெய் - தேவைக்கு அல்லது கால் கப்
ஏலக்காய் -4
முந்திரி -6
உலர் திராட்சை -8
பேரிச்சை துண்டுகள்-4
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். பீட்ரூட்டை துருவியோ அல்லது விழுதாக அரைத்து எடுக்கவும். இப்போது அடி கனமான வாணலியில் பாதி அளவு நெய் விட்டு முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீச்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை சேர்த்து பீட்ரூட் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்.
அதனுடன் வெல்லக் கரைசல் சேர்த்து கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது பாதாம் பவுடர் மற்றும் மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறவும். கெட்டியான பதம் வந்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக்கிளறி இறக்கவும். கண்கவரும் பீட்ரூட் அல்வா ரெடி. வெல்லம்ம் பேரீட்சை உலர் திராட்சையில் என இதில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.