அம்மாக்களின் ‘மேஜிக்’ ரெசிபி: மீந்த உப்புமாவில் மொறுமொறு கட்லட்!

easy-evening-snacks
upma-cutlet
Published on

-ஸ்ரீவித்யா பசுபதி

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது அத்தனை சுலபமல்ல. அதுவும் ஒருமுறை செய்ததே திரும்பவும் செய்தால் அதை அதிகம் விரும்பமாட்டார்கள். அவர்களை அசத்தும் வகையில் வித்தியாசமாக ஏதாவது மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்யவேண்டும். உணவுப் பொருளும் விரயமாகக் கூடாது. அப்படி என்ன செய்யலாம்னு பார்க்கலாமா.

காலையில் செய்த ரவா உப்புமா மீதமாகிவிட்டதா? கண்டிப்பாக இரவு யாரும் அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதை வைத்து மாலை நேரத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் செய்தால், நிமிடத்தில் எல்லாம் காலியாகிவிடும். செய்யலாமா?

காலை உணவுக்கு செய்து மீதமான ரவை உப்புமாவை கையால் மசித்து பிசைந்து கொள்ளவேண்டும். இரண்டு அல்லது மூன்று உருளைக்கிழங்குகளை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கை உப்புமாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு, மிளகாய்ப்பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். (ஏற்கனவே உப்புமாவில் உப்பு, பச்சைமிளகாய் இருக்கும். அதனால் உப்பு காரம் அளவாகச் சேர்த்துக் கொள்ளவும்.)

இப்போது எல்லாம் சேர்ந்து கலந்த கலவையை வட்ட வடிவமாக கட்லட் போலத் தட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் மொறு மொறுப்பாகவிட்டு எடுத்தால் சுவையான கட்லட் தயார். இதில் மேலும் சுவை கூட்ட கேரட், பட்டாணி போன்ற காய்கறிகளை நாம் சேர்த்துக் கொள்வது நம் விருப்பம்.

இதையும் படியுங்கள்:
நாக்கில் கரையும் காசி அல்வா: வெண்பூசணியில் ஆரோக்கியமான ஸ்வீட் செய்வது எப்படி?
easy-evening-snacks

இந்தக் கலவையை வட்டமாகத் தட்டியபிறகு, நடுவில் குழி செய்து கொஞ்சம் சீஸ் வைத்து மூடி, சீஸ் கட்லட்டாகவும் செய்யலாம். இளைய தலைமுறை சீஸ் பன்னீர் போன்றவற்றைத்தானே அதிகம் விரும்பி உண்கிறார்கள்.

இந்த உப்புமா கலவையிலேயே சீஸைத் துருவி சேர்த்து, நீளமாகவோ, பந்துபோல் உருட்டியோ, எண்ணெயில் பொரித்தால், சீஸ் பால்ஸ் போன்ற சுவையுடன் நிமிடத்தில் காலியாகிவிடும். வெஜ் சீஸ் பால்ஸ் என்று நாமே ஒரு பெயரையும் வைத்துவிட்டால் போதும். மீதமான உப்புமாவில் செய்தது என்பதை நீங்களாகச் சொன்னால்தான் தெரியும். ருசி அபாரமாக இருக்கும்.

சரி, இன்று ரவை உப்புமா செய்யவில்லை, சேமியா உப்புமா செய்து மீதமாகிவிட்டது என்ற கவலை வேண்டாம். ரவை, சேமியா, அவல் உப்புமா (கோதுமை ரவை உப்புமா தவிர) என எந்த உப்புமாவாக இருந்தாலும், இந்த முறையில் செய்து அசத்துங்கள்.

இனிமேல் உப்புமா மீதம் என்ற கவலையும், ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்வது என்ற குழப்பமும் உங்களுக்கு வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com