
ராகி மேத்தி ஊத்தப்பம்
தேவை:
இட்லி மாவு – 1 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
முழு ராகி – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முழு கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, மிக்ஸியில் நன்றாக அரைத்து புளித்த இட்லி மாவுடன் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கீரை, உப்பு போட்டு, 3 நிமிடம் வதக்கி ஆற விடவும். வதங்கிய கீரையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சத்து நிறைந்த ராகி மேத்தி ஊத்தப்பம் தயார்.
கடலை மாவு ஊத்தப்பம்
தேவை:
கடலை மாவு - 2 கப் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலை மாவை நீரில் உப்பு சேர்த்து கெட்டியாக கரைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லில் மாலை ஊற்றி, எண்ணெய் விட்டு வேகவைக்கவும். சிவந்ததும் மிளகு, சீரகக் பொடியை அதன் மேல் தூவினால் சுவையான கடலை மாவு ஊத்தப்பம் தயார்.
ரவை கோதுமை ஊத்தாப்பம்
தேவை:
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை, உப்பு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து எடுத்துக்கொள்ளவும்.
தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஊத்தபங்களாக வார்த்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாற, சுவையான ரவை கோதுமை ஊத்தப்பம் தயார்.
வரகரிசி ஊத்தப்பம்
தேவை:
வரகரிசி – ஒன்றரை கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் – 1
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
வரகரிசியை 2 மணி நேரமும், உளுத்தம்பருப்பை அரைமணி நேரமும் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 4 மணி நேரம் கழித்து மாவுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை கலந்து, தோசைக்கல்லில் ஊத்தப்பமாக வார்த்தெடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வெகு பொருத்தம்.