
ஆவியில் வேகவைத்த எந்த உணவுமே உடலுக்கு மிகவும் நல்லது. எளிதில் ஜீரணமாகும். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை காலை அல்லது இரவு என எந்த நேரத்திற்கும் சாப்பிட ஏற்ற டிபன் இது. ருசியான ஸ்பைசி மற்றும் மினி கொழுக்கட்டைகள் செய்வதும் எளிது.
புதினா மல்லி ஸ்பைசி பிடி கொழுக்கட்டை:
பச்சரிசி மாவு ஒரு கப்
புதினா கால் கப்
கொத்தமல்லி, கால் கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
தேங்காய்த் துருவல் 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
புதினா, கொத்தமல்லி, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் ரெண்டு கப் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்த மசாலாக்களை சேர்த்து கொழுக்கட்டைக்கு தேவையான உப்பும் சேர்த்து பச்சரிசி மாவை தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். இறக்கி எலுமிச்சம் பழச்சாறு கலந்து சிறிது ஆறவிடவும்.
கையில் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையால் பிடித்து வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்க மிகவும் ருசியான, மணமான கொழுக்கட்டை தயார். பசியைத் தூண்டும், பித்தத்தை போக்கும். அனைவரும் விரும்பும் இந்த கொழுக்கட்டைகளை மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.
மினி கொழுக்கட்டை:
ஜவ்வரிசி ஒரு கப்
மைதா கால் கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
தேங்காய் துருவல் 1/4 கப்
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
வெதுவெதுப்பான நீரில் ஜவ்வரிசியைப் போட்டு அரைமணி நேரம் ஊற விடவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, மைதா, அரைத்த மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அழுத்தி பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்க மிகவும் ருசியான மினி கொழுக்கட்டை தயார்.