
ரசத்தில் மல்லித்தழை சேர்ப்பதுபோல, முருங்கை இலைகளைப் போட்டாலும், ரசம் மணமாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
வாழைக்காயை அரைவேக்காடாக வேகவைத்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கி, ஆறியதும் பொரித்தால் வருவல் நல்ல மொறு மொறுப்பாக வரும்.
பருப்பு உசிலிக்கு பருப்பை ஊறவைத்து, நீரை வடித்துவிட்டு, இட்லி தட்டில் ஆவியில் வேகவைத்து எடுத்து நன்கு மசித்தால் போதும். அரைக்க வேண்டியதில்லை.
முளைக்கீரையை வேகவைத்து, நீரை வடித்து விட்டு, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்து, தயிரில் கலந்தால், சத்தான கீரை தயிர் பச்சடி தயார்.
கறிவேப்பிலை துவையல் அரைக்கும் போது, சிறிது துவரம் பருப்பை வறுத்து, அரைத்துச் சேர்த்தால், துவையல் சுவையாக இருக்கும்.
இட்லி மாவுடன் சிறிது பெருங்காயத்தூள் கலந்தால், இட்லி வாசனையாக இருக்கும். வாய்வு தொல்லையும் வராது.
கீரை பாசிப்பருப்பு கூட்டு செய்யும்போது, அதில் அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்தால், சுவை, மணம் கூடும்.
எண்ணெய் கொதிக்கும்போது, அதில் நீர் பட்டால் சட சடவென்று சத்தம் வரும். ஒரு சிறிய துண்டு வாழை இலையை எண்ணெயில் போட்டு விட்டால், சத்தம் அடங்கிவிடும் நீரும் உறிஞ்சப்படும்.
கோதுமையை கழுவி சில மணி நேரம் ஊறவைத்து, காயவைத்து, பிறகு மாவு ஆக்கி சப்பாத்தி செய்தால், மிகவும் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
பஜ்ஜி மாவுக்கு கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா 1/2 கப் என்ற விகிதத்தில் கலந்தால், பஜ்ஜி சுவையாக, மொறு மொறு என்று இருக்கும். வயிற்றுக் கோளாறும் வராது.
மீந்து போன கறிவேப்பிலையை உலர்த்தி, ஹாட் பேக்கில் வைத்தால், சில நாட்களுக்கு பசுமையாக இருக்கும்.
பொரித்த உணவு பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டு 1 போட்டு வைத்தால், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்.
காய்கறிகளை நறுக்கும் முன் அரிவாள்மனை அல்லது கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்தால், நறுக்குவது சுலபம்.
காய்ச்சிய பாலை அகன்ற பாத்திரத்தில் வைத்தால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். குறுகிய பாத்திரத்தில் வைத்தால் விரைவில் கெட்டுவிடும்.
அரிசி கழுவும்போது சிறிது கல் உப்பு கலந்து கொண்டால், அரிசி பளிச்சென்று இருக்கும். புழு, வண்டு இருந்தாலும் அகன்றுவிடும்.