
வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு சிறியதாக நறுக்கியது- ஒரு கப்
பயத்தம் பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன் ஊறவைத்தது
வெண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி -அரை டீஸ்பூன்
பூண்டு பற்கள் -4
மஞ்சள் பொடி -ஒரு சிட்டிகை
மிளகுப் பொடி -இரண்டு சிட்டிகை
கறிவேப்பிலை, மல்லித்தழை- கைப்பிடி அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீருடன் ஊறவைத்த பருப்பு வாழைத்தண்டு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் மஞ்சள், சீரகப்பொடி, வேகவைத்த பருப்பு வாழைத்தண்டுகளை தண்ணீருடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். இறுதியாக மிளகுப்பொடி, கருவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும். வாசனையுடன் வாழைத்தண்டை சாப்பிடாதவர்கள் கூட இந்த சூப்பை விரும்பி அருந்துவார்கள். இதனால் தேவையற்ற கொழுப்பு கரையும். உடல் பருமன் சீராகும்.
வாழைத்தண்டு பக்கோடா
செய்ய தேவையான பொருட்கள்:
சற்று பெரிதாக நறுக்கிய வாழைத்தண்டு- ஒரு கப்
கடலை மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு இரண்டும் கலந்தது- ஒரு கப்
அரிசி மாவு- கைப்பிடி அளவு
கறிவேப்பிலை பொடியாக அரிந்தது- கைப்பிடி அளவு
அரிந்த வெங்காயம்- கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் பொடியாக அரிந்தது- 3
ஊறவைத்த பயத்தம் பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து பிசைந்து பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும். வாழைத்தண்டு பொரிந்த உடன் சிறியதாக ஆகிவிடும். ஒரு வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்த வாழைத்தண்டு பக்கோடா.