
பொரியல், வறுவல் செய்யும்போது தேங்காய்க்கு பதில் சோயா சங்க்ஸ், பனீர் இவற்றின் துருவலை சேர்க்கலாம். சாட் பவுடர், ஆம்ச்சூர் பவுடர் தூவி இறக்க சுவை அதிகரிக்கும்.
எந்தவித சிப்ஸ் செய்யும் போதும் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும். பின் உப்பு, காரம், ஆம்ச்சூர் பவுடர், நெய் 1டீஸ்பூன் ஊற்றி கலந்து பரிமாற சுவையாக இருக்கும்.
கலந்த சாதம் எதுவானாலும் வழக்கமான தாளிப்புடன் முந்திரிப் பருப்பு, நிலக்கடலை போட்டு பின் புளி சாதமெனில் சாம்பார்சாத பொடி, வாங்கிபாத் பொடி என ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து செய்ய சுவையாக இருக்கும்.
கட்லெட் செய்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி பொரிக்காமல் தவாவில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கட்லெட்டை பொரித்து எடுக்க நன்றாக இருக்கும்.
டீ போடும்போது ஒரே மாதிரியாக போடாமல் மசாலா டீ,ஆவாரம்பூ டீ,செம்பருத்தி டீ என தயாரிக்க சூப்பராக இருக்கும்.
இந்த சீசனில் குடிக்கும் தண்ணீரில் நன்னாரி வேர், வெட்டிவேர்,சீரக தண்ணீர்,நெல்லி என ஏதாவது ஒன்றை போட்டு குடித்து வர நீர்ச்சுருக்கு,தாகம் இன்றி உடல் குளுமையாக இருக்கும்.
மொத்தமாய் மல்லி, மிளகாய்த்தூள், குழம்புதூள் அரைக்கும்போது அரைத்து வந்தவுடன் ஆறவைத்து உப்பு அல்லது வி எண்ணெய் தடவி பாத்திரத்தில் வைக்க நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
குருமா செய்யும்போது தேங்காய்க்கு பதில் தயிர் அல்லது பொட்டுக்கடலை மாவு சேர்க்க திக்காக வருவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
எந்த துவையல் செய்தாலும் பொருட்களை நன்கு வதக்கி விட்டு அரைக்க சுவை அதிகரிப்பதுடன் நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.
இனிப்பு பானகம்,பச்சடி செய்யும்போது ஏலக்காய்த்தூள்,சுக்குப் சேர்க்க வாசனையாக இருப்பதுடன் செரிமானத்தை யும் மேம்படுத்தும்.
இந்த சீசனில் மருதாணி வைத்துக்கொள்ள சளி பிடிக்காது. மருதாணி அரைக்கும்போது கிராம்பு1, புளி அல்லது கொட்டைப் பாக்கு சிறிது வைத்து அரைத்து பின் போட்டுகொள்ள நன்றாக சிவக்கும்.
ஊறுகாய், தொக்கு என எது செய்ததும் பாத்திரத்தில் வைக்கும் முன் பாத்திரத்தில் சூடான எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சுற்றிலும் பாத்திரத்தில் படுமாறு சுழற்றிவிட்டு பின் ஊறுகாயை போட கெடாமல், நீண்ட நாள் நிறம் மாறாமல் இருக்கும்.
வத்தல் மாவில் பச்சை மிளகாய் அரைத்து சேர்ப்பதுபோல் மிளகாய் விதை சேர்த்து மிளகாய்த்தூள் போட்டு செய்ய நன்றாக இருக்கும்.