

சமையலில் புதுசு புதுசாக அசத்தவேண்டும் என்பது சிலரின் எண்ணம். சிலருக்கோ தாங்கள் அசைவம் சாப்பிட முடியவில்லை அவர்கள் விதவிதமாக சாப்பிடுகிறார்களே என்று நினைப்பார்கள். அசைவம் சாப்பிடுபவர்களோ அது இல்லாத அன்று அதேபோன்று என்ன மாதிரியான ரெசிபி இருக்கிறது என்று இணையத்தில் தேடுவார்கள். இவர்கள் அனைவரையும் திருப்தி செய்யும் வண்ணம் சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் ஒரு ரெசிபி உள்ளது. மதுரை பக்கம் இந்த ரெசிபி மிகவும் பிரசித்தமாக உள்ளது. அதுதான் கடலைப்பருப்பும் பாசிப்பருப்பும் சேர்த்து செய்யும் காஜலி அம்பட் (Gajali Ambat). வாருங்கள் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிஷினில் அரைக்க:
பாசிப்பருப்பு -250 கிராம்
கடலைப்பருப்பு -250 கிராம்
அரைக்க;
பட்டை - கட்டை விரல் அளவுக்கு
கல்பாசி - 2 அல்லது 3 இலைகள்
மிளகு - 15 அல்லது 20 கிராம்
வறுத்த மிளகாய்- 5
சீரகம்- 15 கிராம்
தனியா விதை - 15 கிராம்
வதக்க;
வெங்காயம் (சிறியது பெரியது இரண்டும் இணைந்து) - 400 கிராம்
தக்காளி - 200 கிராம்
கருவேப்பிலை - கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை - கைப்பிடி அளவு இஞ்சி பூண்டு விழுது -50 கிராம்
புதினா -கைப்பிடி அளவு
சேர்க்க:
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியா தூள்
கறி மசாலா - 1டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பு ,பாசிப்பருப்பு இரண்டையும் அரவை மில்லில் தந்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது மிக்ஸியில் அரைத்தால் சரி வராது.
அரைத்த மாவை இட்லி மாவைவிட சற்று கெட்டியாக நீரூற்றி கரைத்துக்கொள்ளவும். உடன் சிறிது மட்டும் உப்பு போட்டுக் கொள்ளவும். நன்றாக மாவை கலந்து இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதில் கடலைப்பருப்பு போன்றவை இருப்பதால் இந்த இட்லிகள் சற்று கட்டித் தன்மையாகதான் இருக்கும்.
இப்போது அரைப்பதற்கு தேவையான பட்டை, கல்பாசி மிளகு, வறுத்த மிளகாய், சீரகம், தனியா இவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியை ஆய்ந்து பொடியாக நறுக்கி கழுவி வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டு உரித்து விழுதாக்கி அரைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி கூடவே இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வாசம் வரும் வரை வதத்து தக்காளியை போட்டு நன்றாக கிளறவும். கூடவே இரண்டு மூன்று பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். சிறிது நீர் தெளித்து நன்றாக தக்காளி வதங்கும் வரை காத்திருந்து பின் நைசாக அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், கறி மசாலா மற்றும் தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். இதற்குள் இட்டிலிகள் எடுத்து ஆறவிட்டு கத்தியில் சிறிது எண்ணெய் தேய்த்து ஒரே அளவாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது மசாலா நன்றாக கொதித்து வரும்போது இந்த வெட்டி வைத்துள்ள சைவ ஈரல்களை அதில் போட்டு மேலும் நன்றாக கிளறுங்கள். கூடவே நறுக்கி வைத்துள்ள பொதினா கொத்தமல்லித்தழையும் தூவி முடி வையுங்கள்.
இப்போது கிரேவி நன்றாக ஓரளவு கெட்டிப்பதத்தில் வந்துவிடும். எண்ணெய் பிரிந்து வரும்போது அதை இறக்கி சூடாக பரிமாறுங்கள்.