
கி மு 3000 ஆண்டு வாக்கில் தென் அமெரிக்கா பகுதிகளில் பயிரிடப்பட்ட ஒரு தாவரம்தான் மிளகாய். தற்போது இதன் கார சுவைக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இதில் 4000 வகைகள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மிளகாயின் விதை படிமங்களை பெரு நாட்டின் கடற்கரை பகுதிகளில் கண்டறிந்துள்ளனர்.மாயன் ஆட்சி காலத்திலேயே மிளகாய் பயிரிடப்பட்டதாக கூறுகிறார்கள். மிளகாய் உண்மையில் பழ வகையைச் சேர்ந்தது. இரண்டு ஆண்டுகள் கூட உயர் வாழும் தாவரம்.
மிளகாய்க்கு கார சுவையை தரும் அதன் விதைகளில்தான் 12 சதவீதம் 'காப்சின்' என்ற பொருள் உள்ளது. இதுதான் வலி நிவாரணியாக செயல் படுகிறது. மூட்டு வலி, தசைப்பிடிப்பு, சுளுக்கு மற்றும் விரக்தியுணர்வு வலிகளையும் போக்கும் ஆற்றல் உடையது காப்சின். இது மட்டுமல்ல இதயம், நுரையீரல், சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் கணையம் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும் உதவுகிறது. அதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும், கொலஸ்டிராலையும் குறைக்கிறது. இதனை அதிகப்படியான அளவில் எடுத்து கொள்ள அல்சர், மூல நோய், வாயுக்கோளாறுகளும் ஏற்படும். எனவே இதனை அளவாக பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வகை மிளகாய்க்கும் சில தன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் சில மிளகாய்களின் சிறப்பை பார்க்கலாம்...
காஷ்மீர் மிளகாய் பார்ப்பதற்கு சுருக்கங்களுடன் காட்சியளிக்கும். இவற்றில் காரம் அதிகமாக இருக்காது. 95 சதவீதம் இது சிவப்பு வண்ணம் கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கும். 5 சதவீதம் மட்டுமே இதில் காரம் இருக்கும்.
இதேபோல் குண்டு மிளகாய் அல்லது நாட்டு மிளகாய் என்ற ஒரு வகையும் உள்ளது. குழம்பில் காரம் அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பயன்படுத்துவார்கள். இதேபோல், பார்ப்பதற்கு நீளமாக இருக்கும் ஒரு மிளகாய் வகை உண்டு. இந்த வகை மிளகாயில் அதிகமாக காரமும் இருக்காது, நிறமும் இருக்காது. இதன் காம்புகளை அகற்றிவிட்டு பாக்கெட்டுகளில் இதனை விற்பனை செய்கின்றனர்.
இது தவிர கர்நாடகா மிளகாய் என்ற ஒரு வகை இருக்கிறது. இது பெரிய அளவில் நிறத்தை கொடுக்காது. இதில் சிறிதளவுதான் காரமும் இருக்கும். மேலும், மெலிசான ஒருவகை மிளகாய் இருக்கிறது. இது அதிகப்படியான காரம் கொடுக்கக் கூடியது. 4 மிளகாய்கள் போட வேண்டிய இடத்தில், இதில் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும்.
மிளகாயின் காரமானது "ஸ்கோவில்லி கார அலகுகளில்" (எஸ்.எச்.யூ) அளவிடப்படுகிறது. கின்னஸ் சாதனைபடி உலகிலேயே மிக அதிக காரமான மிளகாயின் கார அளவு 1,01304 புள்ளிகள் ஆகும். இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விளையும் "பூட் ஜோலோக்கியா" என்ற வகை மிளகாய்தான் இந்த காரமான மிளகாய்.
மிளகாய்கள் வளரும்போது அதில் இருந்து Aflatoxin என்ற கொடிய நச்சுத்தன்மை உருவாகும். இது இருக்கும் மிளகாயை சாப்பிட்டால் கேன்சர் பாதிப்பு வரும் எனக் கூறப்படுகிறது. மிளகாய்களில் பழுப்பு நிறத்தில் வெள்ளைபூத்தது போன்று இருந்தால், அவற்றை பயன்படுத்தக் கூடாது. அத்தகைய மிளகாய்களில் Aflatoxin இருக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மேலும், மிளகாய் அரைப்பதில் சில வழிமுறைகள் இருக்கின்றன. நாம் எடுத்துக் கொள்ளும் காரத்திற்கு ஏற்ற மிளகாயை ஒரு பங்கும், நிறம் கொடுக்கக் கூடிய காஷ்மீர் மிளகாயை ஒரு பங்கும் சேர்த்து அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காரம் மற்றும் நிறம் ஆகிய இரண்டுமே கிடைத்து விடும்.
மேலும், குழம்பு ருசியாக இருப்பதற்கு சில டிப்ஸும் இருக்கிறது. மிளகாய் அரைக்க எடுத்துச் செல்லும்போது அத்துடன் சேர்த்து சிறிது பச்சரிசியையும் வறுத்து கொண்டு செல்லலாம். இவை இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்த பொடியை குழம்பில் பயன்படுத்தினால், அவை கூடுதல் ருசியாக இருக்கும்.