

தக்காளி ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பருப்பு ரசம் செய்ய துவரம் பருப்புடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்தால் ரசம் சுவையாக இருக்கும்.
பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து கரகரப்பாக தட்டி ரசம் வைக்கும் பாத்திரத்தில் போட்டு விட்டு, பிறகு ரசத்தை சூடாக இறக்கி அதில் ஊற்றி மூடிவைத்தால் மணமும் சுவையும் கூடும்.
மோர்க் குழம்பிற்கு அரைக்கும்போது ஒரு ஸ்பூன் மல்லி விதைகள் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
பூரிக்கு உருளைக்கிழங்கு மசால் செய்யும்போது சிறிது பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா அரைத்து சேர்த்தால் சுவை இருக்கும்.
காரக்குழம்பிற்கு வறுக்கும்போது கறிவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு அதிகமாக சேர்த்தால் குழம்பு மணமாக இருக்கும்.
தேங்காய் சட்னி ரகசியங்கள்:
தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது கடலையுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய்ச் சட்னிக்கு கடலையுடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, சீரகம் தாளித்தால் சுவை கூடும்.
தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது இரண்டு சின்ன பூண்டு பல், கொஞ்சம் வேர்க்கடலை, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைக்கலாம்.
துவரம் பருப்புடன் ஒரு கைப்பிடி பாசிப் பருப்பும் சேர்த்து குக்கரில் வேகவைத்து சாம்பார் செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்.
புளி கரைசலை எளிதாக செய்ய புளியை தண்ணீரில் அலசி, பிறகு சூடு தண்ணீரில் ஊறவைத்து பிழிந்தால் எளிதாக இருக்கும்.
பாசிப்பயறை குக்கரில் வேகவைக்கும்போது அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து, பிறகு தேங்காய் எண்ணெயில் தாளித்த வெங்காயம் சேர்த்து மசித்தால் சுவை தூக்கலாக இருக்கும்.
கீரை வகைகளை பால் சேர்த்து வேகவைத்து சமைத்தால் சுவை அள்ளும்.
இட்லி–தோசை மாவு அரைக்கும்போது ஒரு பங்கு சாப்பாட்டு அரிசி சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.