தமிழக கிராமப்புறங்களில் தலைமுறை தலைமுறையாக உணவாக உட்கொள்ளப்படும் பாரம்பரிய உணவுதான் செலவு ரசம். இது வெறும் உணவு மட்டுமல்ல பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு இயற்கையான தீர்வாகும். இன்றைய காலகட்டத்தில் செயற்கை சுவைகள் நிறைந்த உணவுகளை நாம் அதிக உட்கொள்ளும் நிலையில், செலவு ரசம் போன்ற பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் மிக அதிகம். இந்தப் பதிவில் செலவு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செலவு ரசம் என்பது தமிழகத்தின் சில பகுதிகளில் பிரபலமான ஒரு வகை ரசம். இது பொதுவாக சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவே பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள், மூலிகைகள் உடலுக்கு நன்மை பயக்கும் பல குணங்களைக் கொண்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 4 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 6 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
வரமிளகாய் - 6
பூண்டு - 12
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, மல்லித்தூள், மஞ்சள் தூள், பூண்டு வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, உப்பு போட்டு லேசான கொதி வரும் வரை விடவும்.
இறுதியாக கொதி வரும் சமயத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், அட்டகாசமான செலவு ரசம் தயார்.
இந்த ரசத்தில் உள்ள மிளகு, சீரகம் போன்ற பொருட்கள் சளி மற்றும் இருமலை போக்கும் தன்மை கொண்டவை. இதில் சேர்க்கப்படும் மஞ்சள் தொண்டை வலியை குறைத்து தொண்டை புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இந்த ரசம் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
காய்ச்சல் இருக்கும்போது செலவு ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வெப்பத்தைக் குறைத்து உடல் சோர்வைப் போக்கும். இதில் சேர்க்கப்படும் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த செலவு ரசத்தை, மேலே குறிப்பிட்ட முறையைப் பின்பற்றி முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.