ஷாஹி துக்டா 16ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் முஹலாய ஆட்சிக்காலத்தில் உருவான இனிப்பு பண்டமாகும். இதன் பொருள், அரசர்களுக்காக செய்யப்பட்ட துண்டு என்பதேயாகும். இந்திய சமையல்காரர்கள் முஹலாயர்களுக்கு செய்து கொடுத்தனர். முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானுக்கு இந்த இனிப்பை விரும்பி செய்வார்கள். சரி வாங்க, அப்படிப்பட்ட இனிப்பு வகையை வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
ஷாஹி துக்டா செய்ய தேவையான பொருட்கள்:
பிரெட்-5.
பால்- 1லிட்டர்.
நெய்- தேவையான அளவு.
குங்குமப்பூ- சிறிதளவு.
பால் பவுடர்-1/2 கப்.
சக்கரை-1/4கப்.
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
ஏலக்காய் பொடி- தேவையான அளவு.
சக்கரை பாகு செய்வதற்கு,
சக்கரை-1/2 கப்.
தண்ணீர்-1/2 கப்.
ஷாஹி துக்டா செய்முறை விளக்கம்:
முதலில் பிரெட்டை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வெட்டிய பிரெட் துண்டுகளை நெய்யிலே நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது பொரித்த பிரெட் துண்டுகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பால் 1 லிட்டரை சுண்ட காய்ச்ச வேண்டும். இப்போது பாலில் சிறிதளவு குங்குமப்பூவை நிறத்திற்காக சேர்க்கவும். பால் பவுடர் ½ கப்பை கட்டியில்லாமல் சேர்த்து கலக்கி கொள்ளவும் அத்துடன் சக்கரை 1/4 கப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது பொடியாக வெட்டி வைத்திருக்கும் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தூவி விடவும். அத்துடன் ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து கலக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து அதில் சக்கரை ½ கப், தண்ணீர் ½ கப் சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் நிறத்திற்காக சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இப்போது பாகு பதம் வரும் வரை கலக்கி இறக்கி விடவும்.
இப்போது பொரித்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை பாகில் நன்றாக முக்கி எடுத்து ஒரு தட்டில் வரிசையாக அடுக்கிக் கொள்ளவும். பிறகு அதன் மேல் செய்து வைத்திருக்கும் பால் கலவையை கரண்டியில் எடுத்து அழகாக ஊற்றவும். இப்போது அதன் மீது பொடியாக வெட்டி வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, பாதாமை தூவி பரிமாறவும். அவ்வளவு தான், சுவையான ஷாஹி துக்டா தயார். வீட்டிலேயே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.