

ஆறு வகை சுவைகளில் இனிப்பு சுவையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இனிப்பு வகைகள் ஏராளம் உண்டு. அந்த வகையில் முகலாய மன்னர்கள் விரும்பி சாப்பிட்ட இனிப்பு வகையான 'ஷாகி துக்கடா' பற்றி இப்பதிவில் காண்போம்.
ஷாகி துக்கடா (Shaki Tukda)வரலாறு
அரசு குடும்பத்தைச் சார்ந்தது என்பது 'ஷாகி'யை குறிக்கும். 'துக்கடா' என்பதன் பொருள் 'துண்டு' ஆகும். முகலாய மன்னர்கள் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்தபோது மீதமாக இருந்த பிரட் துண்டுகளை வைத்து அவர்களது சமையல்காரர்களால் உருவாக்கப்பட்ட இனிப்புதான் 'ஷாகி துக்கடா'. முகலாய மன்னர்களின் விருப்பமான இனிப்பாக பிற்காலத்தில் இந்த இனிப்பு விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முகலாய மன்னர்களின் தட்டில் தவறாமல் இடம்பெற்ற இந்த ஷாகி துக்கடா இனிப்பை நம் வீட்டிலும் அதே சுவையுடன் செய்யலாம். அதற்கான செய்முறையை பின்வருமாறு காணலாம்.
செய்முறை:
ஒரு பிரட்டை எடுத்துக்கொண்டு ஓரங்களை கத்தரித்து முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் விடாமல் நெய் மட்டும் ஊற்றி பிரட்டை மொறு மொறுப்பாக வறுக்கவும். இந்த வாசனைதான் 'ஷாகி துக்கடா' இனிப்பிற்கு சுவை கொடுக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து ஏலக்காய் தட்டி போட்டு சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். அதன் பிறகு நெய்யில் வறுத்த பிரெட்டை இதில் நனைத்து எடுக்கவேண்டும்.
மற்றும் ஒரு பாத்திரத்தில் பாலை பாதியாக சுண்டக்காய்ச்சி திக்கான பாலை வறுத்து சர்க்கரைப் பாகுவில் சிறிதளவு நனைத்த பிரட்டின் மேல் ஊற்றவேண்டும். பிறகு பாதாம், பிஸ்தா பருப்புகளை தூவி விடவும். மேலும் சுவை சேர்க்க வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை கலந்து ரப்ரியில் சேர்த்தால் பொன்னிற வடிவமும் அதன் சுவையும் அலாதியாக இருக்கும். குங்குமப்பூதான் இந்த டிஷ்ஷிற்கு கிரீமி (creamy) உணவைத் தருகிறது. விருந்து மற்றும் விசேஷங்களுக்கு இதன் மேல் வெள்ளித் தகடு ஒட்டினால் ஹோட்டல் ஸ்டைலை மிஞ்சிவிடும்.
ஷாகி துக்கடா பரிமாறும் முறை:
இதனை விருந்தினர்களுக்கு சூடாகவும் பரிமாறலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் சாப்பிடலாம். பெரும்பாலும் சில்லென்று இருப்பதுதான் பலருக்கும் பிடிக்கிறது.
குறைந்த செலவில் பிரம்மாண்டமான இனிப்பு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு 'ஷாகி துக்கடா மிகச்சிறந்த தேர்வாகும். சாப்பிட்டு முடித்த பிறகு இந்த இனிப்பை சாப்பிட்டால் விருந்து முழுமையடையும்.