இந்த தீபாவளிக்கு மொறுமொறு சக்கர்பரே ஈசியா செய்யலாமா?

Shakarpara
Shakarpara
Published on

நான் டீக்கடைகளுக்கு செல்லும் போது விதவிதமான பண்டங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒன்று நம்மை மிகவும் கவரும். வெடித்துப் பிளந்து போண்டா போலவும் இருக்கும் அது மைதா மாவில் செய்த இனிப்பு ஆகும். மைதா மாவில் செய்யப்படும் இந்த இனிப்பு வகை பம்பாய் லக்கடி என்றும் கலகல, சக்கர் பாரா, சக்கர்பாலி, சக்கர்பரே அழைக்கப்படுகிறது. வட நாடுகளில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது

"சக்கர் பாரா" நமது இந்திய பாரம்பரிய இனிப்பு சிற்றுண்டியாகும், இதன் பொருள் "சர்க்கரைத் துண்டுகள்" அல்லது "இனிப்பு கடி" என்பதாகும். இது மைதா மாவு, சர்க்கரை, நெய் , சில சமயங்களில் ரவை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்.. இவற்றை மாவாக பிசைந்து, சதுரங்கள், முக்கோணங்கள் அல்லது கீற்றுகள் போன்ற வடிவங்களில் வெட்டப்பட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகிறது. இதை துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்து சேகரித்து பிஸ்கட் ஸ்நாக்ஸ் ஆக குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலை நேரத்தில் கொரிக்கலாம். நம் தமிழ்நாட்டில் இது மைதா பிஸ்கட் எனப்படும்.

இது செய்வது மிகவும் எளிது குழந்தைகளுக்கு அவ்வப்போது தருவதற்கு ஏற்ற பிஸ்கட்டாகவும் இது இருக்கிறது. எப்படி செய்வது என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை - 1/2 கப் (100 கிராம்)

  • ஏலக்காய் - 4

  • மைதா - 2 கப் (250 கிராம் )

  • பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன் அல்லது பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

  • நெய் அல்லது வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

  • எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை

சக்கரையையும் ஏலக்காயையும் மிக்ஸியில் மிகவும் நைசாக பவுடர் போன்று அரைத்துக் கொள்ளவும் . அதை ஒரு பவுலில் கொட்டி சலித்த மைதா மாவு மற்றும் பேக்கிங் சோடா போட்டு நன்கு கலந்து அதில் உருக்கிய நெய் அல்லது வெண்ணையை ஊற்றி மேலும் நன்கு ஒன்றோடு ஒன்று கலக்குமாறு கலந்து விட்டு பிறகு சிறிது சிறிதாக நீரையூற்றி (சுமார் 6 டேபிள்ஸ்பூன் நீர்) தளரவும் இல்லாமல் மிக கெட்டியாகவும் இல்லாமல் ஓரளவுக்கு பதமாக பிசைந்து வைக்கவும். இதை இரண்டு உருண்டைகளாக பிரித்து வைக்கவும்.

இந்த மாவு மிகவும் தளர்வாக இருந்தால் பிஸ்கட் மொறுமொறுப்பு தராது. அதேபோல் மிக கெட்டியாக இருப்பதும் சரிவராது. சிறிது நேரம் ஊறியதும் சப்பாத்திக்கல் அல்லது சுத்தமான கடப்பா கல்லில் அடியில் சிறிய அளவு மைதா மாவைத் தூவி அதன் மேல் இந்த மைதா உருண்டைகளை கனமான பூரி போல் திரட்டி ஒரு கத்தியால் டைமன் வடிவில் அல்லது சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும் .

இப்போது அடுப்பில் தேவையான அளவு எண்ணெய் வைத்து அதிகம் காயவிடாமல் மிதமான வெப்பத்தில் வெட்டி வைத்திருக்கும் சககரபாரா பிஸ்கட்டுகளை போடவும். ஒரு நிமிடம் விட்டு பிஸ்கட்டுகளே திருப்பி போடவும் .ஓரளவு நன்கு சிவந்ததும் எடுத்து வடிகட்டி காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் - வெள்ளி - வெண்ணெய் - என்ன சம்பந்தம்?
Shakarpara

இதில் வெண்ணெய் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு மிக நல்லது. மைதா மாவு சேர்க்க பிரியப்படவில்லை எனில் அதற்கு பதிலாக ராகி மாவு மற்றும் சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சக்கரை சேர்த்தும் இந்த பிஸ்கட்டுகளை செய்யலாம் .

இதில் சிலர் ஓமம், சீரகம் சிறிது சேர்த்தும் அவரவர் விருப்பத்திற்கு சுவைக்கு ஏற்றவாறு செய்வதுண்டு. இனி டீக்கடைக்கு செல்லாமலேயே சககர்பாராவை நமது வீட்டிலேயே செய்து அசத்தலாம் இந்த தீபாவளிக்கு நாமும் செய்வோம் கலகலன்னு கலகல..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com