
ஆன்மீகம், ஆரோக்கியம் இரண்டிலும் வெண்ணெய்க்கு முக்கியத்துவம் உண்டு. உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெயில், A, E, K2 என்ற கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வெண்ணெய் எளிதில் உருகுவது போல கஷ்டங்ககளும் கரையும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
ஆரோக்கியத்தில் வெண்ணெயின் பங்கு
விட்டமின்கள் அதிகம் நிறைந்த வெண்ணைய் சாப்பிட்டு வந்தால் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் நெருங்குவதில்லை. மேலும் இது சருமத்துக்கு மினுமினுப்பை தருவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவுகிறது.
வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளதால் அளவாக சாப்பிட வேண்டும். தரமுள்ள வெண்ணெயை பயன்படுத்துவதோடு கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்காமல் இருக்க அளவோடு சாப்பிட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆன்மீகத்தில் வெண்ணெயின் முக்கியத்துவம்
ராமன், ராவணன்
ராமன்- ராவணன் யுத்தம் நடந்தபோது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றிருக்கிறார். அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார். சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாகத்தான், தன்னுடைய உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
அதுபோல, வெண்ணெய் விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணெய் உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
வெண்ணெய் காப்பு சாற்றலாம்
ஆஞ்சநேயர் அருள் பூரணமாக கிடைக்க சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வேண்டும்போது, நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் வெண்ணெய் காப்பு சாற்றுவது அவசியமான வழிபாடாகும்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதால், கஷ்டங்கள் நீங்கி, நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும். அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாக கூறப்படுகிறது. எனவே, வெண்ணெய் காப்பு சாற்றுவது, ஆஞ்சநேயரின் காயத்தை ஆற்றி, அவரை குளிர்ச்சியடைய செய்யுமாம்.
வெண்ணெய் பிள்ளையார்
அதேபோல, கிருஷ்ணருக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பதற்காகவே இன்றைக்கும் கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் படைத்து வழிபடுகின்றனர்.
வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து வைப்பதாலும், பெரும் பலனை அடையலாம். புதன் கிழமையில் வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வைக்கலாம். இதற்கு பசுவின் வெண்ணெய்யை வாங்கி வந்து அதில் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து, பூஜை செய்யலாம். அரச இலை, வாழை இலை மீது வெண்ணையை வைத்து, நைவேத்திய பிரசாதங்களையும் படைத்து, விநாயகரை வழிபட்டு வர வேண்டும். வெண்ணெய் விநாயகரை வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கடன் தொல்லையும் நீங்கும்.
செவ்வாய் - வெள்ளிக்கிழமை
ஒருசிலர் வீடுகளில் வெண்ணெய் எடுப்பார்கள். அப்படி வெண்ணெய் உருக்கும்போது, செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டும் உருக்கக்கூடாது. காரணம், வெண்ணையில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மட்டும் உருக்க கூடாது.