
வெயில் காலம் வந்து விட்டாலே வெயிலில் கடுமையோடு, பள்ளி விடுமுறை விட்டு குழந்தைகளையும் சமாளிப்பது பெரிய விஷயம். இந்த சீசனில் கிடைக்கும் முக்கனிகளைக் கொண்டு விதவிதமாக செய்து கொடுத்து குழந்தைகளை சந்தோஷப்படுத்துவோமா?
மாம்பழ ஸ்வீட் ரைஸ்:
மாம்பழத் துண்டுகள் 1 கப்
சாதம் 2 கப்
சர்க்கரை 1 ஸ்பூன்
நெய் சிறிது
பாதாம் 10
முந்திரி 10
நெய்யில் பாதாம், முந்திரி பருப்புகளை ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வறுக்கவும். மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். உதிர் உதிராக வடித்த சாதத்தில் மாம்பழ கெட்டி விழுது, வறுத்த பாதாம், முந்திரித் துண்டுகள், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாற குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஸ்வீட் ரைஸ் தயார்.
ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்:
மாம்பழத் துண்டுகள் 1 கப்
சர்க்கரை 3/4 கப்
காரப்பொடி 1 ஸ்பூன்
உப்பு 2 சிமிட்டு
மாம்பழத் துண்டுகளை நன்கு குழைவாக வேகவிடவும். வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைந்ததும் வடிகட்டி திரும்பவும் வாணலியில் விட்டு கொதிக்க விடவும். பாகுபதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள மாம்பழத்துண்டுகளை சேர்த்து காரப்பொடி, உப்பு சேர்த்து கிளறவும். சாஸ் பதம் வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கி ஆறியதும் பாட்டில் போட்டு பத்திரப்படுத்தவும்.
சப்பாத்தி, பூரி, பிரெட் என தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
வாழைப்பழ குல்பி:
ரஸ்தாளி வாழைப்பழம் 4
மில்க் மெய்ட்
முந்திரி 10
பாதாம் 10
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
வாழைப்பழத்தை விழுதாக அரைக்கவும். அத்துடன் மில்க் மெய்ட், பொடித்த பாதாம், முந்திரித் துண்டுகள், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதனை குல்ஃபி அச்சுகளில் நிரப்பி ஃப்ரீஸரில் வைத்து கெட்டியாக உறைந்ததும் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்வதும் எளிது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பலாப்பழ மில்க் ஷேக்:
பலாச்சுளை 5
பால் 2 கப்
சர்க்கரை தேவையானது
பலாப்பழத்தை நன்கு அலம்பி கொட்டை நீக்கி சர்க்கரையும் சிறிது பாலும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு மீதமுள்ள பாலை விட்டு நன்கு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பருக வெயிலுக்கு இதமாக இருக்கும். விருப்பப்பட்டால் ஏதேனும் எசென்ஸ் சிறிது கலந்து தர குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.