
முறுக்கு மாவுடன் ஒரு பிடி வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்துக்கொண்டால் முறுக்கு கரகரப்பாக மேலும் சுவையுடன் இருக்கும்.
தக்காளிப் பழங்களை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்காமல், தனியாக ஒரு பிளாஸ்டிக் தட்டில் ஈரமின்றித் துடைத்து, பரவலாக வைத்துவிட்டால் தக்காளிப்பழங்கள் ஒரு வாரம் வரை கெடாது.
பஜ்ஜி தயாரிக்கும் பொழுது கடலைமாவு, அரசிமாவு தீர்ந்துவிட்டதா? கோதுமை மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
வெள்ளரிக்காய் கசக்கிறதா? இரு முனைகளையும் நறுக்கி விட்டு, சிறிது உப்புத்தூளை நறுக்கிய பகுதியில் தடவித் தேய்த்தால் நுரை வரும். அந்த நுரையைக் கழுவிவிட்டால் வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மை நீங்கிவிடும்.
ஊறுகாய், உப்பு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து பயன்படுத்தக்கூடாது. அப்படி வைத்தால் அவை பிளாஸ்டிக்குடன் வேதிவினை புரிந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.
நெல்லிக்காய்களை ஒரு துணியில் கட்டி தண்ணீர் பானைக்குள் போட்டு வைத்திருங்கள்.நெல்லிக்காய் ஊறிய இனிப்பான தண்ணீருக்கு எப்படிப்பட்ட தாகம் என்றாலும் தணிந்து விடும்.
வெங்காய ஊத்தப்பத்திற்கு வெங்காயம் போடும் போது, இரண்டு பல் பூண்டையும், மெல்லிசாக சீவிப் போட்டுச்சுட, ஊத்தப்பம் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆப்பிளையும், கேரட்டையும் ஃ ப்ரிட்ஜில் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. ஏனென்றால் ஆப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு வகை வாயு கேரட்டை கசக்கச் செய்துவிடும்.
எந்தவித பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்த பயத்தம் பருப்பைச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
பேரீச்சம் பழத்தை பால் சிறிது விட்டு அரைத்து, சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்தால் இனிப்பு சுவையுடன் சப்பாத்தி தயார்.
இரண்டு கப் சோளம், ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் உளுத்தம் பருப்புடன், இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, அரைத்து தோசை வார்த்தால், நார்ச்சத்து மிகுந்த சுவையான தோசை ரெடி.
கடையிலிருந்து போரிக் பவுடர் வாங்கி கிச்சன் மூலைகள், மற்றும் கரப்பான் பூச்சிகள் வருமிடத்தில் தூவி வைத்தால் கரப்பான் பூச்சிகள் வரவே வராது.