லட்டு பிடிக்கும்போது கவனிக்க வேண்டிய எளிய குறிப்புகள் !

laddu...
laddu...

வீட்டில்  விருந்தினர் வருகை. விழா மற்றும் பண்டிகைக் காலம் என்று வந்துவிட்டால் விதவிதமாக லட்டு பிடிப்பது நம் வழக்கம். லட்டை பிடிக்காதவர்கள் யாரும் இலர். ஆதலால் லட்டு நன்றாக அழகாக இன் சுவையாக வர, அதற்கு சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அதைப் பிடிக்கும் பொழுது  சரிவர பிடிபடாமல் போனால் பயனுள்ளதாக அமையும். அதற்கான குறிப்புகள் இதோ:

மூன்று கப் பொட்டுக்கடலை ஒரு கப் சர்க்கரை ஒரு டீஸ்பூன் ஏல பொடி ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் பொடித்து பால் தெளித்து உருண்டை பிடித்துக் கொடுத்தால் பல்லில்லாத பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பர். செய்வதும் எளிது. சத்துக்களும் கிடைக்கும். 

உளுத்த மாவு, பயத்த மாவு, ரவா லட்டு போன்றவற்றை செய்யும் போது முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும் நெய்யையும் போட்டு நன்றாக கலக்கவும் .அதன் பிறகு அதனுடன் சேர்க்க வேண்டிய ஏதாவது ஒரு மாவை சேர்த்து உருண்டை பிடித்தால் சுலபமாக உருண்டை பிடிக்க வரும். உருண்டை உதிர்ந்தால் சிறிதளவு பால் தெளித்து பிடிக்கலாம். 

பாசிப்பயறு மாவுடன்   வறுத்த எள், வறுத்த தேங்காய்சீவல்கள், பொட்டுக்கடலை சேர்த்து லட்டு பிடிக்கும் பொழுது இந்த பொடித்த மாவில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி பிடிக்க வேண்டும். பிடித்ததும் அதை வர அரிசி மாவில் புரட்டி எடுத்து வைத்து விட்டால் நன்றாக கெட்டியாகிவிடும். 

வேர்க்கடலையையும் , எள்ளையும் வறுத்து அதனுடன் வெல்லத் துருவலையும் சேர்த்துப் பொடித்து லட்டு பிடித்தால் உடையாதிருக்கும். 

கீரை விதையில் லட்டு பிடிக்கும்பொழுது சிறிதளவு வேர்க்கடலையையும் சேர்த்து லட்டு பிடித்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நல்ல ருசியாகவும் இருக்கும். 

பொரி உருண்டை மற்றும் வேர்க்கடலை உருண்டை செய்யும்பொழுது வெல்லப் பாகில் சிறிதளவு சுக்குப் பொடி அல்லது இஞ்சிச்சாறு சேர்த்துக் கொண்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இவற்றிற்கு ஜீரண சக்தி உள்ளதால் வயிற்றுக் கோளாறும் ஏற்படாது.

பூந்தி லட்டு ,அவல் லட்டு ,ரவை லட்டு, கடலை மாவு லட்டு போன்றவற்றை செய்யும் பொழுது ஏதாவது பழ எஸன்ஸைக் கலந்தால் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும். சிறிதளவு பாதாம் எண்ணெயை விட்டு கலந்து பிடித்தாலும் லட்டு வகைகள் அசத்தலாக இருக்கும். 

சைஸ் வாரியாக விதவிதமாக செய்யும் பூந்தி லட்டுகளில் டைமண்ட் கல்கண்டை சேர்த்து லட்டு செய்தால் நன்றாக இருக்கும். 

டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் பேரிச்சை வகைகளை கலந்து லட்டு செய்யும்போது சிறிதளவு பாதாம் எண்ணெய், பழ எஸன்ஸ் கலந்தால் அசத்தலாக இருக்கும். 

கோதுமையை வறுத்து அதனுடன் வெல்லத்துருவல் வறுத்த மிளகு சேர்த்து பொடித்து நிறைய நெய் விட்டு லட்டு பிடித்து சாப்பிட்டால் சளி தொந்தரவு குறையும். 

ஒரு கப் வெள்ளை எள்ளை வறுத்து அதனுடன் சமஅளவு பொட்டுக்கடலை போட்டு பொடித்து மில்க்மெய்டு விட்டு லட்டுகளாகப் பிடிக்கலாம். இதைப் பிடிப்பதும் எளிது. பாகு வைப்பதற்கான நேரமும் மிச்சம். 

ரவா தேங்காய் லட்டு செய்யும்போது முந்திரி பருப்பை பொடித்து போட்டு வெள்ளரி விதையை கலந்து லட்டு செய்தால் பிரமாதமாக இருக்கும். 

முறுக்கு உடைசல் அதிகமாக இருந்தால் வெல்லப்பாகு வைத்து அதில் முறுக்குகளை சீராக உடைத்துப் போட்டு உருண்டை பிடித்து வைக்கலாம். குழந்தைகள் போக வர சாப்பிட வசதியாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
பொன்னான 15 புத்தர் மொழிகள்...! வாழ்க்கைக்கான நல்வழி பாடங்கள்!
laddu...

வீட்டில் கஞ்சி மாவு இருந்தால் அதை நெய்யில் லேசாக வறுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை வெள்ளரி விதை,  வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் சீவல் சேர்த்து சிறிதளவு பால் தெளித்து லட்டு பிடிக்கலாம் சத்துக்கள் நிறைந்தது இது. 

லட்டு பிடிக்கும்போது சர்க்கரை மற்றும் வெல்ல பாகு சரியான பதத்தில் இருந்தால் லட்டுகள் பிடிக்கும் பொழுது உருண்டையாக அழகாக வரும். 

குறிப்பு:

சரியான பாகுபதத்தில் பிடித்த உருண்டைகள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும். 

வெல்லம் மற்றும் சர்க்கரை நெய் இவற்றை தாராளமாக விட்டு பிசைந்த மாவில் லட்டுகள் பிடித்தால் லட்டுகள் பிடிப்பது எளிது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். வெளியில் வைத்து உபயோகிக்கலாம். பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

பால் கலந்து பிடிக்கும் லட்டுக்களை சீக்கிரமாக தீர்த்து விட வேண்டும். பிரிட்ஜிலும் வைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com