

சிறு கிழங்கு ஊட்டச்சத்து நிறைந்ததும், கிராமிய சமையலிலும் பாரம்பரிய உணவுகளிலும் முக்கிய இடம் பெற்றதும் ஆகும். இதைக் கொண்டு செய்யப்படும் சில சுவையான உணவுகள் (Siru Kizhangu Recipes):
சிறு கிழங்கு பொரியல்
தேவையானவை:
சிறுகிழங்கு – 250 கிராம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 1 (நறுக்கியது)
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய்தூள் – ½ தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சிறு கிழங்கை கழுவி தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சிறிது உப்பு சேர்த்து, 10–12 நிமிடம் வேகவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து மெலிதாகும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வேகவைத்த சிறு கிழங்கை சேர்த்து மெதுவாக கிளறி 5–7 நிமிடம் நன்றாக பொரியவிடவும். இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து ஒருமுறை கிளறி அடுப்பை அணைக்கவும். சூடான சிறு கிழங்கு பொரியலை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம்.
சிறு கிழங்கு பக்கோடா
தேவையானவை:
சிறுகிழங்கு – 250 கிராம்
கடலைமாவு – 1 கப்
அரிசிமாவு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
நறுக்கிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி விழுது – ½ தேக்கரண்டி
செய்முறை: சிறு கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். ஒரு கலவை பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் கெட்டியான பக்கோடா மாவாக கலக்கவும். நறுக்கிய சிறு கிழங்கை அந்த மாவில் சேர்த்து நன்றாக ஒட்டுமாறு கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவில் தோய்த்த சிறு கிழங்கை மெதுவாக எண்ணெயில் போடவும். மிதமான தீயில் பொன்னிறமாகவும் முறுக்காகவும் பொரித்து வடிகட்டி தட்டில் எடுக்கவும். மழைக்கால டீ / காபியுடன் பரிமாறலாம்.
சிறு கிழங்கு குழம்பு
தேவையானவை:
சிறுகிழங்கு – 250 கிராம்
புளி – எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 6–8 பல் (நசுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1½ தேக்கரண்டி
மல்லிதூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – தேவைக்கு
செய்முறை: சிறு கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி, நடுத்தர துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சிறு கிழங்கை 10–12 நிமிடம் குழையாமல் வேகவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி. தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். இப்போது மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வேகவைத்த சிறு கிழங்கை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்கவிட்டு, புளி கரைசல் சேர்க்கவும். மிதமான தீயில் 10–12 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். சூடான சிறு கிழங்கு குழம்பு சாதம், தோசை, இட்லி, ராகி களியுடன் அருமையாக இருக்கும்.