பொதுவாக அரிசி மாவு கொண்டு பால் கொழுக்கட்டை செய்வது வழக்கம். சிகப்பு அவல் மிகவும் சத்து மிகுந்த உணவு. எனவே இதனைக் கொண்டும் பால் கொழுக்கட்டை ருசியாக செய்யலாம். சத்தான காலை உணவாகவோ, மாலை டிபனாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
தேவையானவை:
சிகப்பு அவல் ஒரு கப்
உப்பு ஒரு சிட்டிகை
நெய் ஒரு ஸ்பூன்
பால் ஒரு கப் (200 மிலி)
சர்க்கரை 3/4 கப்
குங்குமப்பூ சிறிது
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் 1 கப்
செய்முறை:
சிகப்பு அவலை சூடு வர வறுத்து மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். 3/4 கப் தண்ணீரை நன்கு சுட வைத்து பொடித்த அவல், உப்பு கலவையில் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து பிசையவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு மாவை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் உள்ளவற்றை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் ஒரு கப் பால், அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டி வைத்துள்ள சிவப்பு அவல் உருண்டைகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து உடனே கிளறாமல் இரண்டு நிமிடங்கள் கழித்து நிதானமாக உருண்டைகளை கிளறி விட அவை நன்கு மேலே எழும்பி வரும். அந்த சமயத்தில் சர்க்கரை முக்கால் கப் அளவு போட்டு, குங்குமப்பூ சிறிது, ஏலப்பொடி சிறிது போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும். எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தேங்காய்ப்பால் விட்டு கிளறி பரிமாற ருசியான பால் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: கொதிக்கும் பாலில் போடுவதால் உருண்டைகள் கரையாது.