
சீரகம்-புதினா சட்னி ரெசிபி:
தேவையான பொருட்கள்:
1. புதினா 1 கட்டு
2. ஜீரகம் 1 டீஸ்பூன்
3. எலுமிச்சம் பழம் 1
4.உப்பு தேவையான அளவு
செய்முறை: புதினாவை இலை இலையாகப் பிய்த்து நன்கு கழுவிக்கொள்ளவும். ஜீரகத்தையும் புதினா இலைகளையும், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் மசிய அரைத்தெடுக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழ ஜூஸ் சேர்த்து கலந்து, சாதத்திற்கு அல்லது ஃபிரிட்டருக்கு (Fritter) தொட்டு சாப்பிடவும்.
மாங்கா-ஓமச் சட்னி
தேவையான பொருட்கள்:
1. பச்சை மாங்காய் 1
2. ஓமம் 1 டீஸ்பூன்
3. உப்பு தேவையான அளவு.
செய்முறை:
மாங்காயை கழுவி, தோல் சீவி பொடிசா நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் ஓமம், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும். காரமும் புளிப்பும் நிறைந்த இந்த சட்னி பருப்பு சாதம் மற்றும் ஸ்டஃப்டு பரோட்டாவுடன் சேர்த்து உண்ண ஏற்றது.
கறிவேப்பிலை-பெருங்காயச் சட்னி
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை இலைகள் 100 கிராம்
2. பெருங்காயத் தூள் ¼ டீஸ்பூன்
3. துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்
4. புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
5. உப்பு தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலைகளைக் கழுவி மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும். சாதத்திற்கு அல்லது இட்லிக்கு தொட்டுக்கொள்ள சிறந்ததொரு சட்னி.
பூண்டு-தக்காளிச் சட்னி
தேவையான பொருட்கள்:
1.உரித்த பூண்டுப் பற்கள் 8
2.பெரிய சைஸ் தக்காளி 2
3.கடுகு கால் டீஸ்பூன்
4.வெல்லாம் ஒரு சிறு துண்டு
5.உப்பு தேவையான அளவு.
செய்முறை: நன்கு பழுத்த தக்காளிப் பழங்களை நறுக்கி, மற்ற அனைத்துப் பொருட்களுடனும் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்தெடுக்கவும். கிச்சடி அல்லது தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள, சிறிது இனிப்பு சுவையுடன் கூடிய சுவையான தக்காளிச் சட்னி தயார்.
நெல்லிக்காய்-கொத்தமல்லிச் சட்னி
தேவையான பொருட்கள்:
1.கொத்தமல்லி இலைகள் 2 கைப்பிடி
2.பெரிய நெல்லிக்காய் 4
3.உப்பு தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காய்களைக் கழுவி, கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும். அதனுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும். எந்த வகை சாதத்தோடும் தொட்டுக்கொண்டு உண்ணலாம்.
இஞ்சி-புளி சட்னி
தேவையான பொருட்கள்:
1.இஞ்சி 50 கிராம்
2.புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
3.உப்பு தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை கழுவி, தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். அதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும். சாட் ஐட்டம் அல்லது கிரில்டு ஸ்னாக்ஸ்ஸுடன் தொட்டு உண்ண சுவையான சட்னி.
மேலே கூறப்பட்ட 6 வகை சட்னிகளுமே நம் இரைப்பை குடல் இயக்க உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தருபவை. நீங்களும் அடிக்கடி செய்து பயன்பெறுங்களேன்!