புளிக்குழம்பு, சாம்பார், மசியல் போன்றவற்றில் தாளிப்பு வடகம் சேர்க்க மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும். அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டிலேயே நம் பாட்டிமார்கள் செய்து பானையில் பத்திரப்படுத்தி இருப்பர். ஒரு வருடம் ஆனாலும் கெடாத சுவையும் மணமும் மிக்க சின்ன வெங்காய தாளிப்பு வடகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் 1 கிலோ
உளுத்தம் பருப்பு 100 கிராம்
கடுகு 50 கிராம்
மஞ்சள் தூள் 25 கிராம்
வெந்தயப் படி 25 கிராம்
உப்பு தேவையானது
பெருங்காய பொடி 4 ஸ்பூன்
கருவேப்பிலை 1 கப்
கொத்தமல்லி தழை 1 கப்
விளக்கெண்ணெய் 50 கிராம்
கரகரப்பாக அரைக்க:
முழு பூண்டு 2
மிளகாய் 15
சீரகம் 4 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை 1/4 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து உப்பு சேர்த்து அதனையும் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
இப்பொழுது கொரகொரப்பாக அரைத்த உளுந்துடன் வெங்காயம் அரைத்தது, கருவேப்பிலைை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கடுகு, வெந்தயப் பொடி, கரகரப்பாக அரைத்த பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து விளக்கெண்ணெய் 50 கிராம் கலந்து நன்கு பிசைந்து தட்டில் அமுத்தி வைத்து வெயிலில் நாள் முழுவதும் காய விடவும்.
அடுத்த நாள் எடுத்து உருண்டையாக உருட்டாமல் பிளாஸ்டிக் ஷீட்டில் வடைகளாகத் தட்டி நன்கு காய விடவும். உள் ஈரம் போக நான்கு நாட்கள் ஆகும். அதுவரை நன்றாக காயவிட்டு எடுத்து காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
குறிப்பு: உருண்டைகளாக உருட்டி வைத்து காய விட்டால் 15 நாட்கள் வரை காய விட வேண்டும். அப்பொழுதுதான் உள் ஈரம் போகும். இம்மாதிரி வடைகளாக தட்டி காய விட நான்கே நாட்களில் தாளிப்பு வடகம் தயாராகிவிடும். ஒரு வருடம் ஆனாலும் கெடாது.