
டீ போடும்போது எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை சிறிதளவு சீவி போட்டு தயாரிக்க ருசியும் மணமும் கூடும்.
மொச்சை தட்டைப்பயிறு கொண்டைக்கடலை ஆகியவற்றை ஊற வைக்க மறந்து விட்டால் வாணலியில் போட்டு சிறிது நேரம் சூடு வர வறுத்து குக்கரில் வேக விட சுலபமாக வெந்துவிடும்.
குருமா செய்யும்பொழுது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளி இரண்டு முந்திரிப்பருப்பு 6, 7 சேர்த்து அரைத்து கலக்க சுவையான ருசியில் குருமா தயார்.
கொத்தமல்லி புதினா துவையல் அரைக்கும் பொழுது தண்ணீருக்கு பதில் சிறிது தயிர் கலந்து அரைக்க ருசியும் கூடும் நிறமும் பச்சை பசேல் என இருக்கும்.
வாழைக்காய் பொடிமாஸுக்கு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்து கடைசியாக ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிய இதனை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
பச்சை பட்டாணியை வேகவிடும் சமயம் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து விட பட்டாணியின் ருசி கூடும்.
இடியாப்பத்திற்கு மாவு பிசையும் பொழுது அதில் 2 ஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்து செய்ய மணமாக இருக்கும்.
வாழைத்தண்டு, வாழைப்பூ, கத்தரிக்காய் போன்றவற்றை நறுக்கியதும் நீரில் போட்டு ஒரு கரண்டி மோர் விட்டு வைத்து விட கருக்காது நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
வாழைக்காய் பஜ்ஜி செய்யும்போது சிலர் அது உப்பலாக வருவதற்காக பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். இதனை தவிர்த்து ஒரு கரண்டி இட்லி மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்து கலந்து பஜ்ஜி போட சூப்பரான உப்பலுடன் ருசியும் கூடுதலாக இருக்கும்.
பருப்புருண்டை குழம்பு செய்யும் பொழுது கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டும் அரை கப் எடுத்துக்கொண்டு அத்துடன் வாழைப்பூ நறுக்கியது ஒரு கப், காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இட்லி தட்டில் வேகவிட்டு குழம்பில் சேர்க்க வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
எந்த கலந்த சாதம் செய்வதாக இருந்தாலும் காரத்திற்கு பச்சை மிளகாய் 2, ஒரு துண்டு இஞ்சி இரண்டையும் துருவி சேர்த்து கடைசியாக ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு கலந்து விட மணமும் ருசியும் கூடும். பச்சை மிளகாய்த் துண்டுகள் வாயில் படாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மிளகாய் பஜ்ஜி செய்யும் பொழுது மிளகாய்களை கீறி உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சூடான நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து பஜ்ஜி செய்ய அதிக காரம் இன்றி மிளகாய் நன்கு வெந்தும் இருக்கும்.