நம்முடைய சொற்கள் உண்மையுள்ளதாக, சரியான தகவல்களை சுமந்து வருவதாக, கள்ளம் கபடம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதாக வெளிப்படை தன்மை உள்ளதாக இருக்கும்போது மட்டுமே நம்முடைய பேச்சு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். இப்பண்புகளில் குறைவு ஏற்படும்போது கேட்பவர்கள் நம்மை சந்தேக கண்ணுடனேயே பார்ப்பார். நம் பேச்சின் சத்தம் அவர்கள் காதுகளை எட்டினாலும் பேச்சின் பொருள் அவர்களின் மனதை எட்டாது. எனவே நேர்மையான சொற்களால் பேச வேண்டியது மிகவும் கட்டாயம்.
உண்மையான அனுபவங்கள், நிகழ்வுகள், தகவல்கள் நிரம்பி வழியும்போது பேச்சின் ஈடுபாடு அதிகரிக்கும். நம்பிக்கையுடனும், தெளிவாகவும், சரியான குரல் ஓசையுடனும் நேர்மையாக பேசும் போது அப்பேச்சு மிகுந்த வரவேற்பை பெறும். இன்றைய காலகட்டத்தில், நாம் என்றோ பேசிய சொற்கள் கூட நொடி பொழுதில் கேட்பவர் மனதை எட்டி விடும். முன்பு ஒரு முறை வித்தியாசமாக பேசி இப்போது வேறு விதமாக பேசினால் அந்த வித்தியாசத்தை கண்டுபிடித்துவிடுவர். மொத்த பேச்சின் நேர்மையை இது பாதித்துவிடும் எனவே எப்போதும் நேர்மை என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இன்று பலர் தம்மை மிகைப்படுத்தி காட்டிக் கொள்வதற்காக அரைகுறை தகவல்களை பேசுவதை காண்கிறோம். அவர்களின் அறிவு ஆழம் மிக விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையான தகவல்கள் வரும்போது மட்டுமே நம் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படும். பேச்சில் நேர்மையாக இருக்கும்போது மற்றவர்களின் எதிர்மறை கருத்துகளால் நாம் பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.
நாம் தவறான சொற்கள் பேசி விடுவோமோ என்ற பயம் மறைந்துவிடும். தடைகள் தகர்க்கப்படும். எளிமை நிலை கொள்ளும். தாக்கம் அதிகரிக்கும் உறவுகள் மேம்படும்.
சிந்தனையிலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாக இருப்பவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் சக்தி பெற்றவர் களாகவே திகழ்கின்றனர். அவர்களது வார்த்தைகள் அதிக வல்லமை உடையவையாக திகழ்கின்றன. நேர்மை உடையவர்களே சமூகத்தால் மதிக்கப்படுகின்றனர். பின்பற்றப்படுகின்றனர். நேர்மை இல்லாமல் பேசுகின்றவர்களை கண்டு மற்றவர்கள் ஒதுங்கியே செல்கின்றனர். எனவே திறம்பட பேச நேர்மையுடன் பேச வேண்டியது கட்டாயமான அவசியமான ஒன்றாக உள்ளது.