
வடகக் கூழில் கேரட் சாறு, பீட்ரூட் சாறு, தக்காளி சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சாறு போன்றவற்றை சேர்த்தால் வண்ண வண்ண வடகங்கள் தயார். இது உடலுக்கும் நல்லது.
கேசரி செய்யும்போது கடைசியில் கொஞ்சம் வறுத்த கடலை மாவு போட்டுக் கிண்டினால், கேசரி சேர்ந்தாற்போல இருப்பதுடன், கூடுதல் சுவயாக இருக்கும்.
புளிக்காய்ச்சல் செய்யும்போது, மூன்று ஸ்பூன் கசகசாவை வறுத்து, பொடித்து சேர்த்தால் சுவை கூடும்.
தயிரில் கடுகு தாளித்து, இஞ்சி துருவல், மல்லித்தழை, உப்பு கலந்து அதில் டோஸ்ட் செய்த பிரட் வில்லைகளை ஊறவைத்தால், பிரட் தயிர் வடை தயார்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பொரியில் போட்டுக்கிளறி எடுத்தால், சுவையான மொறு மொறு நொறுக்ஸ் தயார்.
புழுங்கல் அரிசி, பச்சரிசி போலவே, கம்பு, ராகி, சோளம், வரகு போன்ற சிறு தானியங்களிலும் இட்லி, தோசை செய்யலாம். சுவையும் கூட, சத்தும் நிறைய கிடைக்கும்.
கோடை காலமாக இருப்பதால், காரமான சட்னி, தொக்கு இவற்றிற்கு பதிலாக, தயிர் பச்சடி தொட்டுக்கொள்ளலாம். உடல் உஷ்ணம் தணியும்.
மாங்காய் சீசன் வருவதால் புளிக்கு பதிலாக மாங்காய் பயன்படுத்தலாம். புளிப்பு சுவையம் கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
பஜ்ஜி மாவு கரைத்ததும் பஜ்ஜிக்கு சீவிய காய்களை தோய்த்து உடனே பொரித்து விட்டால், எண்ணெய் குடிக்காது. பஜ்ஜியும் உப்பி வரும்.
புளியில் சாறு எடுத்து, கொதிக்கவைத்து, இஞ்சி சாறு, உப்பு, வெல்லத்தூள் கலந்து கொதிக்க வைத்தால், தொட்டுக்கொள்ள ஊறுகாய்போல இருக்கும். உணவும் எளிதில் ஜீரணம் ஆகும்.
வெந்தயம் ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், வர மிளகாய் 2, எள் 1 ஸ்பூன், என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, புளிக்குழம்பு வற்றல் குழம்பு இவற்றில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
உளுத்தம் பருப்பு வடகம், வெங்காய வடகம், காய்கறி வற்றல்கள் போன்றவற்றை பொறித்து, குழம்பு, சாம்பார், மோர் குழம்பு போன்றவற்றில் போட்டால் சுவையாக இருக்கும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும் போது, மஸ்லின் துணியால் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல், பச்சைப் பசேலென்று இருக்கும்.
சூப் வகைகள் செய்யும்போது, அரை ஸ்பூன் இஞ்சி சாறு கலந்தால், சுவையும், மணமும் கூடும்.
ஜவ்வரிசி வடாம் கிளறும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கெட்டி அவலைப் பொடித்து, அதில் கலந்துவிட்டால், வடகக் கூழ் கெட்டியாகி விடும்.
தேன்குழல் மாவு மீந்துவிட்டால், அதில் நீர் விட்டுக் கரைத்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, தோசையாக வார்க்கலாம்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, முதலில் சிறிது கடலைமாவை எண்ணெயில் வறுத்து விட்டு கிழங்கை போட்டால், ரோஸ்ட் சுவையாகவும், மொறு மொறுவென்றும் இருக்கும்.
கத்திரிக்காய், வாழைக்காய் நறுக்கும்போது விரல்களில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டால், கறை படியாது.
ரசம் தயாரிக்கும்போது கொத்தமல்லி தழைக்கு பதிலாக முருங்கை இலையையும் சேர்க்கலாம். வாசனையாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.
சௌசௌ உள்ளே இருக்கும் பருப்பை சாம்பார் குழம்பு போன்றவற்றிற்கு அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து அரைத்தால், சுவையும், மணமும் கூடும்.
காலிபிளவர், முட்டைகோஸ் ஆகியவை வேகும்போது, சிறிது சர்க்கரை அல்லது எலுமிச்சம் பழச்சாறு விட்டால், பச்சை வாசனை வராது. சுவையும் கூடும்.