

சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய் தடவி ஒரு டப்பாவில் மூடி ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
காய்ச்சிய பாலில் தீய்ந்த வாடை வந்தால் பாலை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஒரு ஏலக்காய் உரித்து போட்டு விடுங்கள். சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தயிரை ஊற்றிக் கலக்கி மூடி வைத்துவிட்டால் நல்ல கெட்டியான கட்டித்தயிர் ரெடி.
நீர் மோரில் சிறிதளவு ரசப்பொடியைச் சேர்த்துப் பருகினால் அதன் சுவையே அலாதிதான்!
வெந்த கீரையை மிக்ஸியில் போட்டு வைப்பரில் ஒரு சுற்று சுற்றினால் நொடியில் மசிந்துவிடும். சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் சக்கையும் இருக்காது.
நான்கு பங்கு அரிசியுடன் ஒரு பங்கு உளுத்தம் பருப்பு சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். திடீர் விருந்தினர் வந்தால் திடீர் தோசை செய்யலாம்.
பீட்ரூட்டைத் துருவி ஆவியில் வேகவைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் புதுவித சுவை மிகுந்த பச்சடி தயார்.
இஞ்சியைத்துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் குருமா, பொங்கல் என்று இந்த பொடியை சேர்த்தால் மணத்துக்கு மணம், உடம்புக்கும் நல்லது.
நிலக்கடலையை மணலில் வறுப்பதற்கு பதில் மைக்ரோ வேவ் அவனில் சிறிது நேரம் வைத்து சூடாக்கினால் விரைவில் வறுபடுவதோடு அதிக சுவையுடனும் இருக்கும்.
நீளமிளகாயை சின்ன சின்னதாகக்கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்திற்கும் சுலபமாக இருக்கும். கையும் எரியாது.
எந்த வகை பழஜூஸ் செய்தாலும் அதில் வேறு பழத்தின் துண்டுகளை சிறியதாக நறுக்கி, அத்துடன் புதினா இலைகள் ஒன்றிரண்டையும் பொடியாக நறுக்கி ஜூஸின் மேல் தூவி அருந்த சுவைகூடும்.
ஆப்பத்துக்கு மாவு ஆட்டும்போது, தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துவைத்து ஆப்பம் வார்த்தால் சூப்பர் ஆப்பம் தயார்.
தக்காளியை ரசத்துக்கு அரிந்துபோட்டால் வீணாக நேரிடலாம். மிக்ஸியின் வைப்பரில் தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றி ரசம் செய்து பாருங்கள். ரசம் சுவை ஊரைத்தூக்கும்.