
மசால் வடை செய்யும்போது மாவில் அரைமணி நேரம் ஊறிய ஜவ்வரிசி நான்கு டேபிள் ஸ்பூன், பயத்தம் பருப்பு மூன்று டேபிள்ஸ்பூன் கலந்தால், வடை சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
உளுந்து வடைக்கு ஊறவைக்கும்போது, சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்தால், வடை எண்ணெய் குடிக்காது.
உளுந்து வடைக்கு அரைக்கும்போது, சிறிது துவரம் பருப்பு சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.
மோர்க் குழம்பு வடைக்கு கடலை பருப்பு ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் ஊறவைத்து அரைத்தால், வடை மென்மையாக இருக்கும் சீக்கிரம் ஊறிவிடும்.
வடை மாவில் நீர் அதிகமாகிவிட்டால், அதில் ஒரு ஸ்பூன் நெய் கலந்தால், மாவு இறுகிவிடும். சுவையும், மணமும் கூடும்.
வடைக்கு உளுந்தம் பருப்பை ஊறவைத்து, அரைக்கும் போது, நீரை தெளித்து, தெளித்து அரைக்கவேண்டும். அரைக்கும்போது, மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
தயிர் வடை செய்யும்போது, வடையை பொரித்ததும் சுடுநீரில் போட்டு எடுத்து, பிறகு தயிரில் ஊறவைத்தால், வடை விரைவாகவும், நன்றாகவும் ஊறும்.
கமகம பஜ்ஜி செய்ய சில டிப்ஸ்
பஜ்ஜி செய்ய, கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா அரை கப் என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.
பஜ்ஜி மாவில் கற்பூரவல்லி இலைகளை அரைத்து கலந்தால், வாசனையாகவும் இருக்கும். வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படாது. பெருங்காயம் சேர்த்தால், வயிற்றுக் கோளாறு ஏற்படாது.
வெங்காய பஜ்ஜி செய்யும்போது, வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிவிட்டு, பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தால், வெங்காயம் வளையம் வளையமாக பிரிந்து போகாது.
பஜ்ஜி மாவில் தண்ணீருக்கு பதிலாக, தக்காளிசாறு கலந்தால், சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும்.
உளுந்தம் பருப்பு, வரமிளகாய், சீரகம் இவற்றை சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து, பஜ்ஜி மாவில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்தால், பஜ்ஜி சுவையாக இருக்கும்.
பஜ்ஜி மாவு கரைத்த உடனேயே, நறுக்கிய காய்களை தோய்த்து பொரித்தால், எண்ணெய் குடிக்காது.
பஜ்ஜிக்கு கடைகளில் விற்கும் மிளகாய் பொடிக்கு பதிலாக, மிளகாயை வறுத்து, பொடித்து, சேர்த்தால் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும்.
பிரெட் பஜ்ஜி செய்யும்போது, பிரெட் துண்டுகளின் இருபுறமும் தயிரை தடவிட்டு பிறகு மாவில் தோய்த்து பொரித்தால், எண்ணெய் செலவு குறையும்.
வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தால், மொறு மொறு வெண்டைக்காய் பஜ்ஜி தயார்.