மழைக்காலம் வந்துவிட்டது என்றாலே கூடவே சில பிரச்னைகளும் சேர்ந்துவரும். வெளியில் செல்லும் பெண்கள் மழையில் நனைந்தால் மேக்கப் கலைந்து விடும் என்பது அவர்கள் பிரச்னை. குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது பெற்றோர்களின் பிரச்னை. வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு நசநசவென்று இருக்கும் சாலைகள் ஒரு பிரச்னை.
வீட்டில் இருப்பவர்களுக்கு பெரிதாக என்ன பயம் வந்துவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கிறது! இந்த மழைக்காலங்களில் உணவுகள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய வேலை. கெட்டுப்போகாமல் எப்படி பார்த்துக்கொள்வது என்று தெரியாமல் இருப்பது அதைவிட கொடுமை. இனி அதுபோன்ற கவலை துளியும் வேண்டாம். இதை படியுங்கள்:
இறுக்கமாக மூடிவையுங்கள்:
மழைக்காலங்களில் காற்று உள்ளே புகாத பாட்டில்கள் பயன்படுத்துவது நல்லது. இது பாட்டில் உள்ளே ஈரப்பதம் செல்லாமலும் பொருட்கள் பதத்துப் போகாமலும் இருக்க உதவும். இந்த பாட்டில்களில் பாதாம், முந்திரி, திராட்சை போன்ற உலர்ந்த பொருட்களை வைப்பது நல்லது.
உலர்ந்த ஸ்பூன்:
உணவு கெட்டுப்போக மற்றொரு முக்கிய காரணம் இதுதான். அதிகம் பேர் மசாலா பொருட்கள், உப்பு போன்றவை எடுக்க ஸ்பூனை கழுவிவிட்டு அப்படியே பயன்படுத்துவார்கள். இது அந்த மசாலாவை கெட்டுபோகும்படி செய்துவிடும். சமைக்கும் உணவையும் கெடுத்துவிடும். ஏற்கனவே மழை காரணத்தால் சமையல் பொருட்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். அதனுடன் இந்த ஈர ஸ்பூனும் சேர்ந்து, பொருட்களை கெடுத்துவிடும். ஆகையால் உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்துவது மஸ்ட்.
சரியான இடத்தில் வைக்கவும்:
உணவு செய்து முடித்தப்பிறகு அதனை எங்கே வைக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சமையலறையில் ஈரப்பதம் உள்ள இடங்களைவிட்டு வேறு இடத்தில் வைக்கவும். சமையலறையை காற்றோட்டமாக வைத்துக்கொள்வது அவசியம். பொருட்களை மட்டுமே காற்றுப் புகாமல் வைத்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் காற்றாடி பயன்படுத்த வேண்டும். அல்லது ஜன்னல்களைத் திறந்து வைக்கவேண்டும். ஆனால், ஜன்னல் அருகே உணவு வைப்பதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கைகழுவும் சிங்க், கதவு ஆகிய இடங்களில் இருந்தும் உணவுகளைத் தள்ளி வைக்கவேண்டும்.
காய்கறி பழங்களுக்கான பாதுகாப்பு முறைகள்:
காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கியவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைக்கவேண்டும். பின் அதற்கான காற்றோட்டம் சிறிது உள்ளே செல்லக்கூடிய வகையான பைகளில் வைக்கவேண்டும். அவ்வப்போது அழுகி விட்டதா கெட்டுப்போய் விட்டதா என்று சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பழம் கெட்டுவிட்டாலும் உடனே அதிலிருந்து எடுத்து விடவேண்டும். இல்லையெனில் மற்ற பழங்களுக்கும் அழுகல் பரவிவிடும்.
ப்ளாட்டிங் தாள் பயன்படுத்துங்கள்:
காய்கறிகள் மற்றும் பழங்களை பெட்டிகளில் வைக்கும்போது கீழே துணி, பேப்பர் அல்லது நேப்கின் பயன்படுத்துவது நல்லது. ஏதாவது ஈரப்பதம் இருந்தால் அதனை இந்த பேப்பர்கள் உரிந்துக்கொள்ளும்.
சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ப்ளாட்டிங் தாள் பயன்படுத்தினால் அதனுடைய தரம் குறையாமல் பாதுகாக்கப்படும்.
உணவுக் கெட்டுப்போகாமல் இருக்க இதுபோன்ற எளிதான சில டிப்ஸ்கள் பயன்படுத்தினாலே போதும். மழைக்காலங்களில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்கலாம்.