
சர்சோன் கா சாக் (sarson ka saag) என்பது ஒரு பாரம்பரிய பஞ்சாபி உணவாகும். கடுகு கீரையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து சமைக்கப்படும் இந்த உணவு சோள ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது. கடுகு கீரை குளிர் காலங்களில் அதிகமாக வளரும் ஒரு கீரை வகை. அது உடலை சூடாக வைத்திருக்க உதவும் என்பதால் குளிர்கால மாதங்களில் பஞ்சாபில் சர்சோன் கா சாக் பொதுவாக அனைவராலும் உண்ணப்படும் ஒரு உணவாகும். குளிருக்கு இதமான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சர்சோன் கா சாக் செய்முறையைப் பார்ப்போம்.
தேவை:
கடுகு கீரை - 2 கட்டு
பாலக் கீரை - 1 கட்டு
பதுவா கீரை - ½ கட்டு
(சக்கரவர்த்திக் கீரை)
வெந்தய கீரை – சிறிது
பச்சை மிளகாய் - 1
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
நெய் - 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
வெங்காயம், தக்காளி - 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 2, அத்துடன் வெண்ணெய்.
கீரைகளை நன்றாக் கழுவி பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையை குக்கரில், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி. ஒரு விசில் வந்தவுடன் தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். வேகவைத்த கீரையை ஒரு மாஷர் மூலம் மசிக்கவும் பின் மசித்த கீரையில் சிறிது மக்காச்சோள மாவைத் தூவி உப்பு, தண்ணீர் சேர்த்து கலவை சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
ஒரு கடாயை சூடாக்கி நெய் அல்லது வெண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து. வெடித்தவுடன் வரமிளகாய், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளியையும் சேர்த்து தக்காளி மிருதுவாகும் வரை வதக்கிய பின் கீரைக் கலவையை அதில் கலந்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். மேலாக வெண்ணெயை தாராளமாக விட்டு சூடாக சோள ரொட்டியுடன் பரிமாறவும்.