
பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்ததும் பசிக்கு அலைவார்கள். அந்த நேரத்தில் நீங்கள் எது தந்தாலும் அவர்கள் வயிற்றில் இறங்கிவிடும். தினம் போல் பிஸ்கட்டும் சிப்ஸ்களும் தருவதை விட வீட்டிலேயே இதுபோல் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது தந்தால் அவர்களின் பசியும் அடங்கும். ஆரோக்கியமும் பேணப்படும். இந்த ரெசிபிகளில் மைதாமாவு இருந்தாலும் தேவைப் படுபவர்கள் அதில் பாதி அளவு கோதுமை மாவும் கலந்து கொள்ளலாம் ஆனால் சுவை வேறுபடும்.
சீஸ் லிங்ஸ்
தேவை:
மைதா - 3 கப்
கடலை மாவு - 1 கப்
துருவிய சீஸ் - 100 கிராம்
மோர் - 1/2 கப்
பால் - சிறிது
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 11/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவு, கடலை மாவை சலித்து எடுத்துக்கொண்டு அத்துடன் எடுத்து வைத்த மிளகாய் தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள், உப்பு, துருவிய சீஸ் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். 2 கரண்டி எண்ணெயை சுடவைத்து மாவில் ஊற்றி கலந்து இவற்றுடன் தேவையான மோர் பால் இவற்றை சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் ஊறவிட்டு மாவை பூரி பலகையில் விரித்து டைமன் வடிவில் வெட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது குழந்தைகளுக்கு ஏற்ற சுவையுடன் இருக்கும்.
டைமண்ட் பக்கோடா
தேவை:
மைதா - 1/2 கிலோ
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - 10
முந்திரிப்பருப்பு - 15
பச்சை மிளகாய் - 8
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
மைதா மாவை சலித்து எடுத்துக்கொண்டு அதில் நெய், பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து உப்புத் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய சப்பாத்திகளாக இட்டு சோமாஸ்காரன்டியால் ஒரே அளவாக சிறு டைமண்ட் துண்டுகளாக வெட்டி தனித்தனியாக எடுத்து வைத்து எண்ணையில் பொறிக்கவும்.
ஓமப்பொடி
தேவை:
கடலை மாவு - 1/2 கிலோ
உப்பு- தேவையான அளவு
ஓமம் - 5 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
ஓமத்தை கல் மண் நீக்கி சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை மாவுடன் கலந்து உப்புத்தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு குழலில் ஓமப்பொடி அச்சை போட்டு மாவை வைத்து பெரிய ஓமப்பொடியாக வாணலியின் சுற்றளவுக்கு ஏற்றவாறு பிழிந்து உடனே திருப்பிப்போட்டு அதிகம் சிவக்காமல் மஞ்சள் நிறமாக எடுக்கவும்.
ஏனெனில் ஓமப்பொடி சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் அதிகம் எண்ணெயைக் காயவிடக்கூடாது. கூடவே கருவேப்பிலையை எண்ணெயில் பொரித்தும் அதனுடன் கலந்து எடுத்து வைக்கலாம்.