

சொப்பு என்றால் கீரை என்று அர்த்தம். பல்யா என்றால் பொரியல் என்று அர்த்தம். கர்நாடக மாநில மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு இந்த கீரை பொரியல். அதன் செய்முறை விளக்கத்தைக் காண்போம்,
செய்யத் தேவையான பொருட்கள்:
முளைக்கீரை-1கட்டு
பச்சை மொச்சை- அரை கிண்ணம்
பச்சை மிளகாய் கீறியது-2
வெங்காயம் பொடியாக நறுக்கியது- 1
தேங்காய்த் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு- தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
கீரையை ஆய்ந்து, அலசி நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மொச்சை பருப்பை முக்கால் திட்டம் வேகவைத்து அதனுடன் கீரையை சேர்த்து வேகவைத்து அந்தத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி , மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்த கீரை மொச்சையையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு புரட்டி, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இதை செய்து முடித்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். இது இவர்களின் சீசனல் ரெசிபி. கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து விரும்பி உண்ண வைக்கலாம்.
பிறகு அந்தக் கீரை மொச்சை வடித்த தண்ணீரில் உப்பு, மிளகு, சீரகப் பொடி கலந்து உப்புச்சாறு என்று சாப்பிடுகிறார்கள். ஆக மொத்தத்தில் இந்த பொருட்களின் எந்த பாகத்தையும் வீணாக்காமல் சமைத்து உண்டு சத்தைப் பெருக்கிக் கொள்வோமாக!
பச்சரிசி மாவின் அவசியம்:
பருப்பு இல்லாத கல்யாணமா? என்பதுபோல் பச்சரிசி மாவு இல்லாத பதார்த்தமா? என்று கேட்கலாம். அந்த அளவுக்கு அரிசி மாவின் பயன்பாடு நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. அப்படி பச்சரிசி மாவு கை வசம் இருந்தால் எதற்கெல்லாம் பயன்படும் என்பதைப் பற்றி…
வீட்டில் எப்பொழுதும் பச்சரிசி மாவை அரைத்து வைத்துக் கொண்டால் இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை, களி போன்றவற்றை செய்வதற்கு வசதியாக இருக்கும்.
சிறுதானிய மாவுகளுடன் சேர்த்து தோசை வார்ப்பதற்கும் பயன்படும் இந்த பச்சரிசி மாவு.
பஜ்ஜி, பக்கோடா, ரிப்பன் பக்கோடா, காராபூந்தி, ஓமப்பொடி போன்றவற்றை செய்வதற்கு பயன்படும் கடலைமாவுடன் இந்த பச்சரிசி மாவையும் சேர்த்து செய்ய வசதியாக இருக்கும்.
உளுந்து, கடலை பருப்பு, ஜவ்வரிசி போன்றவற்றில் வடைகள் செய்யும்போது மாவு நீர்த்து தண்ணியாக இருந்தால் இந்த பச்சரிசி மாவில் இருந்து தேவையான அளவு எடுத்து கெட்டியாக்கி பதார்த்தங்களை ருசியாகவும், அழகாகவும் செய்யலாம் .
சமயத்தில் அடை, தோசை மாவு புளித்துவிட்டால் பச்சரிசி மாவில் இருந்து கொஞ்சம் சேர்த்து சூழ்நிலையை சமாளிக்கலாம்.
சில நேரங்களில் வீட்டில் ஏதாவது குளிருக்கு தகுந்தாற் போல் கொறிப்பதற்கு செய்து கொடு. முறுக்கு என்றால் பரவாயில்லை என்பார்கள். அதற்காக நாமும் அலட்டிக்கொள்ளாமல் செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் இந்த பச்சரிசி மாவை வறுத்துக் கொண்டு அதனுடன் பொட்டுக்கடலையைப் பொடித்துப் போட்டு எள்,ஓமம், பெருங்காயம் உப்பு, கொதிக்கும் எண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் பிழிய வேண்டியதுதான். இதுபோல் வீட்டிலிருக்கும் எல்லா பருப்புகளிலும் கைப்பிடி எடுத்து வறுத்து மிக்ஸியில் பொடித்து அந்த மாவுகளுடன் பச்சரிசி மாவை கலந்து விதவிதமாக முறுக்கு சுட்டு அசத்தலாம்.
சப்பாத்திமாவு குறைவாக இருந்தால் அதனுடன் பச்சரிசி மாவையும் சேர்த்து ரொட்டி செய்யலாம்.
இப்படி பல்வேறு பதார்த்தங்கள் செய்வதற்கு உதவும் பச்சரிசி மாவை எப்பொழுதும் கையிருப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.