ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாத 3 வடாம் ரெசிபிகள்! இப்போதே செய்துகொள்ளுங்கள்!

Vadam recipe
Vadam recipe

அடிக்கும் வெய்யிலை நன்கு பயன்படுத்தி வடாம், வத்தல், தாளிப்பு வடகம், மோர் மிளகாய் என செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு கவலைப்படாமல் தேவைப்படும் சமயம் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். வீட்டிலேயே செய்வதால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அதிக விலை கொடுத்து கடையில் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.

 • வடாம் போட ஏற்ற மாதம் மார்ச் முதல் ஏப்ரல் வரை தான். மே மாதத்தில் அதிகம் வெயில் அடித்தாலும் காற்றும் கூட சேர்ந்து அடிப்பதால் தூசி, கல், மண் விழுந்து விடும்.

 • முதல்முறையாக வடாம் வத்தல் போடுபவர்களாக இருந்தால் குறைந்த அளவில் செய்து பார்த்து பிறகு போடலாம்.

 • வடாமுக்கு பச்சரிசியை தான் உபயோகிக்க வேண்டும். அதுவும் பழைய அரிசியில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது. பிசுக்கு பதம் எனும் ஒட்டும் பதம் இருக்கும் மாவரிசியில் செய்வதுதான் பெஸ்ட். ரேஷன் அரிசியில் தாராளமாக போடலாம்.

 • 5:1 என்ற விகிதத்தில் 5 பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும்.

 • வடாமுக்கு நைலான் ஜவ்வரிசி சரிப் படாது. பெரிய முத்துக்கள் போல் காணப்படும் மாவு ஜவ்வரிசி தான் சிறந்தது.

 • மாவை அரைத்து வைத்துக் கொண்டால் கூழ் வடாம், ஓமப்பொடி வடாம், முறுக்கு வத்தல், நாடா வடாம், மகிழம்பூ வடாம் என செய்து அசத்தலாம்.

 • கூழ் வத்தலுக்கு சீரகம், எள் அல்லது ஓமம் கடைசியில் சேர்த்து போட பொரிக்கும் போது நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.

 • கருவடாம் போல் கிள்ளி வைக்கும் வடாம்களை ஓலைப்பாயில் வைத்து காய வைக்கலாம்.

 • பிழிய வேண்டிய ஓமப்பொடி, நாடா வடாம்களை பிளாஸ்டிக் சீட் அல்லது காட்டன் துணியில் காய வைக்கலாம்.

 • வடாம் போட கல்லுப்பும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து மொத்தமாக ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு போடலாம். தினம் தினம் அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

 • வடாமுக்கு குறைந்த அளவு உப்பு சேர்க்க வேண்டும். காய்ந்ததும் உப்பு நன்கு தெரியும். ஆனால் காரத்திற்கு போடப்படும் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்க வேண்டும். காரணம் வெயிலில் காயும் போது காரம் அடிபட்டு விடும்.

 • பெருங்காயத் தூளை சேர்ப்பதற்கு பதில் பெருங்காயக் கட்டியை தண்ணீரில் ஊற வைத்து பெருங்காய தண்ணீராக சேர்க்க நல்ல மணம் கிடைக்கும்.

 • மாவு கிளறியதும் கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு அல்லது தயிர் சேர்க்க வடாம் வெள்ளை வெளேர் என்று பொரியும்.

 • வடாம்களை வெயிலில் 4 நாட்கள் தொடர்ந்து காயவைத்து உள் ஈரம் இல்லாமல் நன்கு காய்ந்ததும் ஈரம் படாத, காற்று போகாத டப்பாவில் பத்திரப்படுத்த ஒரு வருடம் ஆனாலும் பூச்சி வண்டு பிடிக்காது.

1. பழைய சாத வடாம்: 

leftover rice vadam
leftover rice vadamImg Credit: Yummy tummy aarthi

தேவையானவை:

 • பழைய சாதம்  5 கப்

 • உப்பு  தேவையானது

 • மிளகாய் 6

 • சீரகம் 1 ஸ்பூன்

 • கருவேப்பிலை சிறிது

 • பெருங்காயத்தூள் 1 ஸ்பூன்

 • புளித்த தயிர் 1/2 கப் (அ) எலுமிச்சம் பழம் 1

செய்முறை:

சாதம் நிறைய மீந்துவிட்டால் கவலைப்படாமல் இந்த வெயில் காலத்தில் அதனை வத்தலாக செய்து வைத்துக் கொள்ளலாம். சுவையும் அபாரமாக இருக்கும்.

முதலில் மிக்ஸியில் பழைய சாதத்திற்கு தேவையான உப்பு, மிளகாய், சீரகம், கருவேப்பிலை அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு அதில் பழைய சாதம் சேர்த்து புளித்த தயிர் அரை கப் விட்டு விழுதாக நன்கு அரைக்கவும். இதனை வெயிலில் பெரிய  தட்டில் சிறிது எண்ணெய் தடவி அல்லது காட்டன் துணியில் சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி வைக்கவும். நான்கு நாட்களில் நன்கு மொறு மொறுவென காய்ந்து விடும். பிறகு இதனை பத்திரப்படுத்தி தேவைப்படும் சமயம் பொரித்து சாப்பிடலாம். விருப்பப்பட்டால் பத்து சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கலந்து வெயிலில் காயவைத்து பொரிக்கலாம். மணமாக இருக்கும்.

2. பிரண்டை வடாம்:

Pirandai vadam
Pirandai vadamImg Credit: Freaky kitchen

தேவையானவை:

 • வடாம் மாவு 2 கப்

 • பிரண்டை துண்டுகள் 2 கப்

 • உப்பு தேவையானது

 • பச்சை மிளகாய் 15

 • பெருங்காயம் சிறிது

 • எலுமிச்சம் பழம் 1

செய்முறை:

ஐந்து பங்கு பச்சரிசி, ஒரு பங்கு ஜவ்வரிசி, இரண்டையும் சேர்த்து மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொண்டால் வடாம் மாவு தயார்.

அடி கனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் 8 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிரண்டையை கைப்படாமல் கிளவுஸ் அல்லது கையில் பிளாஸ்டிக் கவர் சுற்றிக்கொண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். பிரண்டை கையில் பட்டால் அரிக்கும் எனவே இம்முறையில் பிரண்டைச் சாறை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைத்து தண்ணீர் நடுக்கொதி வரும் சமயம் வடிகட்டிய பிரண்டைச் சாறு மற்றும் உப்பு பச்சை மிளகாய் விழுதை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வடாம் மாவை தூவி கட்டி தட்டாமல் கிளறவும். மாவு நன்கு வெந்ததும் இறக்கி கை பொறுக்கும் சூட்டில் எலுமிச்சம் பழம் பிழிந்து கலந்து விடவும். 

மாடியில் பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதில் சிறு கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு கூழ் வடாமை இட்டு வெயிலில் நான்கு நாட்கள் நன்கு காய விட்டு எடுத்து பத்திரப்படுத்தவும். தேவைப்படும் சமயம் எண்ணையில் பொரித்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

பிரண்டை சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இது எலும்புகளை பலப்படுத்தும். வாயு பிடிப்பு, கை கால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படும். இதைக் கொண்டு சட்னி மற்றும் வடகம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காய தாளிப்பு வடகம்!
Vadam recipe

3. அவல் வடாம்:

Aval vadam
Aval vadamImg Credit: Sharmis Passions

தேவையானவை:

 • கெட்டி அவல் 1/2 கிலோ 

 • புளித்த தயிர் 2 கப்

 • வெள்ளை எள் 1 ஸ்பூன்

 • சீரகம்  1 ஸ்பூன்

 • பச்சை மிளகாய் 10 

 • உப்பு தேவையானது

செய்முறை:

அவலை தூசி தும்பு போக நன்கு களைந்து சிறிது புளித்த தயிருடன் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு ஊற விடவும்.

உப்பு, பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்து ஊறிய அவலில் சேர்க்கவும். அத்துடன் எள், சீரகம் சேர்த்து பிசிறி நன்கு கெட்டியாக பிசையவும். பிசைந்த மாவை எவர்சில்வர் தட்டில் சிறிது எண்ணெய் தடவி அல்லது பிளாஸ்டிக் சீட்டில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து நன்கு காய விடவும். உட்புறமும் நன்கு காய ஐந்தாறு நாட்கள் ஆகும். பிறகு அவற்றை காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்த அவல் வடாம் தயார். தேவைப்படும் சமயம் இதனை பொரித்து சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com