

சமையல் கலாச்சாரத்தில் முக்கியமானவை சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ். காரத்தையும், உவர்ப்பையும் சமநிலைப்படுத்தி உணவின் சுவையை உயர்த்தும் இந்த சாஸ்கள் இன்று உலகமெங்கும் பிரபலமாக உள்ளன. உணவின் வாசனை, நிறம் மற்றும் சுவையை அதிகரிக்கக் கூடிய இச்சாஸ்களை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சில்லி சாஸ்
தேவையான பொருட்கள்:
எண்ணெய் _1 ஸ்பூன்
பூண்டு _10 பல்
காய்ந்த மிளகாய்_ 20
தக்காளி _2
உப்பு _தேவைக்கு
தண்ணீர்_ தேவைக்கு
வினிகர் __1/4 கப்
கார்ன் ஃப்ளோர் மாவு _1 ஸ்பூன்
சர்க்கரை _2 ஸ்பூன் + 1/2 கப்
செய்முறை: ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பூண்டு பற்களை சேர்த்து சாதா வரமிளகாய் அல்லது காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து உப்பு கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிபோட்டு அதிக தீயில் வைத்து 3 விசிலுக்கு வேகவைத்து இறக்கவும். ஆவி அடங்கி சற்று ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இத்துடன் வினிகர், சர்க்கரை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும். அரைத்த கலவையை சல்லடையில் வடிகட்டி கொண்டு கப்பியை மாற்றிவிடவும். வடிகட்டிய கலவையை மீண்டும் ஒரு முறை தேங்காய் பால் வடிகட்டும் சல்லடையில் வடிகட்டவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் ஊற்றி அதில் கார்ன்ஃப்ளோர் மாவு சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் சாஸ் மிக்ஸோடு கலந்து பின்னர் ஒரு கடாயில் சேர்த்து அதிக தீயில் வைத்து ½ கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீர் பிரியாமல் சாஸ் போல கெட்டியாக வந்ததும் இறக்கி ஆற வைத்து ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.
சோயா சாஸ்
தேவையான பொருட்கள்:
சர்க்கரை _3/4 கப்
தண்ணீர் _2 கப்
கோதுமை மாவு _1 ஸ்பூன்
சோயா சாஸ் மாவு _1 ஸ்பூன்
உப்பு _1 டீஸ்பூன்
வினிகர் _1/4 கப்
செய்முறை: ஒரு வாணலியில் சர்க்கரையை சேர்த்து பரப்பி குறைந்த தீயில் வைத்து இடையிடையே கிளறி விடவும். இந்த கலவை தானாக உருகி dark brown கலரில் வரும்போது இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் சர்க்கரை உருகும் வரை அதிக தீயில் வைத்து கலந்து விடவும். முழுமையாக கரைந்து வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸிங் பவுல் எடுத்து அதில் கோதுமை மாவு, சோயா மிக்ஸ் பவுடர் சேர்த்து ¼ கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். இந்த கலவையை சர்க்கரை கரைசலுடன் சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறி விடும் போது கெட்டித் தன்மையுடன் light கலராக மாறி வரும். அப்போது உப்பு, வினிகர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கலவை ஓரளவு கெட்டியானதும் இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்துக்கொள்ளலாம்.
சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் ஆகியவை செயற்கை சேர்க்கைகள் இல்லாமல் வீட்டிலேயே தயாரிக்கும்போது, அவை சுவையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். சிறிய அளவில் பயன்படுத்தினாலும் உணவின் சுவையை பெரிதும் மாற்றும் சக்தி இச்சாஸ்களுக்கு உண்டு. எனவே, சுத்தமான பொருட்களைக் கொண்டு வீட்டில் தயாரித்த சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ்களை பயன்படுத்துவது நல்ல சுவையும் நல்ல ஆரோக்கியமும் தரும் சிறந்த வழியாகும்.