கேரளா உணவு ஐட்டமாகிய ‘’எரிசேரியை", எங்கள் பாட்டி அடிக்கடி செய்வதுண்டு. சூப்பராக இருக்கும். சேனை, வாழைக்காய், பறங்கிக்காய் என எது இருந்தாலும், அதை உபயோகித்து, வித விதமாக பண்ணுகையில், டேஸ்ட்டோ-டேஸ்ட்டுதான். அவர் சொல்லிக்கொடுத்த முறை இதோ:
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் - 2
சேனைக்கிழங்கு -200 கிராம்
ஃப்ரெஷ் தேங்காய் - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு ஆகிய இரண்டையும் சேர்த்தும் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு காயை வைத்தும் கூட இதை செய்யலாம். இரண்டையும் சேர்த்து செய்கையில், ஸ்பெஷலாக இருக்கும்.
வாழைக்காய், சேனைக்கிழங்கு இரண்டையும் தோல் சீவி சதுர வடிவில் மீடியம் சைஸில் நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
நறுக்கிய காய்களை, ஒரு பாத்திரத்தில் சேர்த்து காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதோடு சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து, அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த தேங்காயில், மூன்றில் ஒரு பங்கை எடுத்து தனியே வைத்து, மீதமுள்ள வறுத்த தேங்காயுடன், சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த கலவையை, வேக வைத்திருக்கும் வாழைக்காய் சேனைக்காயில் சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கொதி வந்ததும், மற்றொரு அடுப்பில், கடாய் ஒன்றை வைத்து தேங்காய் எண்ணெயை விடவும். இது சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்கும் கலவையில் கொட்டிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தனியாக எடுத்து வைத்திருக்கும் வறுத்த தேங்காயை அதன் மேலே பரவலாக போட்டுவிட, கம-கமவென்ற மணத்துடன், சூப்பரான எரிசேரி ரெடியாகிவிடும். பாட்டியின் கை மணமே அலாதி. சாதத்துடன் கலந்து சாப்பிடுகையில், மேலும் கொண்டு வா- கொண்டு வா என கேட்க வைக்கும்.