காஞ்சீவரம் குடலை இட்லி!

காஞ்சீவரம் இட்லி
காஞ்சீவரம் இட்லிImage credit - tamil.abplive.com

காஞ்சீவரம் என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது பட்டுப்புடவை.   அடுத்ததாக கலைநயமிக்க பிரமிப்பூட்டும் கோவில்கள்.  மூன்றாவதாக கோயிலோடு சம்பந்தப்பட்ட இட்லி.  இட்லிக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  காஞ்சீவரம் இட்லி பெரும் புகழ் பெற்றது. 

தமிழர்கள் அனைத்து கலைகளிலும் தங்கள் முத்திரையை பதித்துள்ளார்கள்.  அதிலும் கலைநயத்தோடு இரசித்து ருசித்து சாப்பிடும் கலையில் தமிழர்களை வெல்ல  இந்த உலகத்தில் யாரும் கிடையாது.  தமிழர்களின் உணவுகள் அனைத்தும் உடல் நலத்தைக் காத்து நிற்கும் மாமருந்து என்றால் அது மிகையாகாது. நம் முன்னோர்கள் காலத்திலிருந்து நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒரு உணவு இட்லி.  

இட்லி என்ற உணவானது கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவில்  முதன் முதலாக உருவானதாக கூறப்படுகிறது.  இந்தோனேஷியாவில் கறுப்பு உளுந்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த உணவானது “கெட்லி” என்று அழைக்கப்பட்டது.  இதன் பின்னர் இந்தோனேஷியாவிலிருந்து  கர்நாடக மாநிலத்திற்கு வந்து பின்னர் தமிழ்நாட்டிற்கு வழக்கத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.  இட்லியை கெட்டி சட்டினி,  வடை, சாம்பார் இவற்றோடு ருசித்து ரசித்துச் சாப்பிடுவது ஒரு தனிச்சிறப்பு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி.

இட்லிகளில் பல வகைகள் உள்ளன.   சாதாரண இட்லி, ரவா இட்லி, சேமியா, இட்லி குஷ்பு இட்லி, என விதவிதமான இட்லிகள் தற்போது நடைமுறையில் உள்ளன.   ஆனால் இட்லி என்றாலே அது கோயில் இட்லி என்று அழைக்கப் படும் காஞ்சீவரம் இட்லிதான்.  இதற்கு நிகரான இட்லி எதுவும் இல்லை.

செங்கற்பட்டிலிருந்து காஞ்சீவரத்திற்குச் செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது வரதராஜப்பெருமாள் கோவில்.   வரதராஜப் பெருமாளுக்கும் தாயாருக்கும் தினமும் காலையில் நைவேத்யமாக கோவில் இட்லி படைக்கப்படுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயமாகும்.   இந்த இட்லி மூங்கில் குடலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் படுவதால் குடலை இட்லி என்றும் அழைக்கப்படுகிறது.  பிரத்யோகமாக தினமும்  குடலை இட்லிகள் தயாரிக்கப்பட்டு வரதராஜப் பெருமாளுக்கும் தாயாருக்கும் நைவேத்யம் செய்யப்படுகிறது.  சுமார் 700 ஆண்டுகளாக பாரம்பரியமான இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.  

இட்லி என்றதும் நம் வீடுகளில் செய்யப்படும் இட்லி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.  இந்த இட்லி மிகவும் பிரம்மாண்டமானது. வீட்டில் இட்லியை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.  ஆனால் இந்த கோயில் இட்லியை தயாரிக்க சுமார் இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை ஆகும்.  அளவில் பெரியதாக இருப்பதால் இந்த இட்லி வேகுவதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.   காஞ்சீவரம் குடலை இட்லி 13 அங்குல நீளமும் 6 அங்குல அகலமும் ஆகிய அளவில் அமைந்துள்ளது.

காஞ்சீவரம் இட்லி
காஞ்சீவரம் இட்லி

மூங்கில் குடலை என்றொரு கூடை இதற்காக பிரத்யோகமாக தயாரிக்கப்படுகிறது.   இந்த மூங்கில் குடலைக்குள் மந்தார இலையை வைத்து அதை ஒட்டி வாழை இலையை வைத்து பின்னர் பதமான இட்லி மாவை ஊற்றி பிரம்மாண்டமான பித்தளை இட்லி பானைக்குள் அடுக்கி வைத்து சுமார் இரண்டரை மணிநேரம் வேக வைக்கப்படுகிறது.   பச்சை நிறத்தில் உள்ள வாழை இலை வெந்ததும் நிறத்தை இழந்து வெளிர்மஞ்சள் நிறத்திற்கு வந்துவிடுகிறது.  வாழைஇலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் எராளம்.   தமிழர்கள் தொன்று தொட்டு வாழை இலையில் சாப்பிடுவது மரபு.  கோவில் இட்லி வேகும் போது வாழையிலையில் உள்ள அற்புதமாக சத்துக்கள் இட்லியில் கலந்து விடுகிறது.  இதனால் கோவில் இட்லி சிறப்பு மிக்கதாக மாறிவிடுகிறது.

இனி இந்த காஞ்சீவரம் இட்லி தயாரிக்க என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.   பச்சரிசி (350 கிராம்), உளுத்தம்பருப்பு (250 கிராம்), வெந்தயம் (10 கிராம்), மிளகு (15 கிராம்), சுக்குத் தூள் (15 கிராம்), சீரகம் (15 கிராம்), பெருங்காயம் (5 கிராம்), கருவேப்பிலை, ரீபைண்டு எண்ணெய் (125 மில்லிலிட்டர்) போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இந்த இட்லி உருவாக்கப்படுகிறது.  இந்த அளவு பொருட்களைப் பயன்படுத்தி ஒரு கோவில் இட்லியைத் தயாரிக்கலாம்.   மேலே சொன்ன பொருட்களில் பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!
காஞ்சீவரம் இட்லி

பின்னர் இதை நறநறவென்று ரவைப் பக்குவத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு மற்ற பொருட்களை இத்துடன் நன்கு கலந்து சுமார் பனிரெண்டு மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.      இவ்வாறு பதமாக புளிக்க வைத்த மாவை மூங்கில் குடலைக்குள் மந்தாரை இலை மற்றும் வாழை இலையைப் போட்டு அதற்குள் ஊற்றி வேகவைக்க வேண்டும்.  சுமார் இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை தொடர்ந்து வேக வைக்க வேண்டும்.  இட்லி மாவோடு வாழை இலையின் மணமும் சேர்ந்து வெந்து இட்லிக்கு ஒருவித தனிச் சிறப்பை ஏற்படுத்தி விடுகிறது. பின்பு சிறிது நேரம் ஆறவைத்துக் கவிழ்த்தால் மணக்கும் காஞ்சீவரம் இட்லி ஆளை மயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com