Special recipes in tamil
Telangana Special recipesImage credit - masalachilli-com

தெலுங்கானா ஸ்பெஷல் லவுக்கி அடை: சுரைக்காய் கொண்டு அசத்தலான டிபன் ரெசிபி!

Published on

பொதுவாக ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவரவர் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டு வரும்போது, அதன் மீதான ஆர்வம் குறைந்து, ஏதாவதொரு வித்யாசமான சுவையில் ஒரு டிபன் அல்லது கிரேவி போன்றவற்றை சாப்பிட வேண்டுமென ஆவல் உண்டாகும். அதற்காக, இப்பதிவில் தெலுங்கானா ஸ்பெஷல் லவுக்கி அடை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தெலுங்கானா ஸ்பெஷல் லவுக்கி அடை ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.சுரைக்காய் (Lauki) 1

2.அரிசி மாவு 1½ கப் 

3.இஞ்சி 10 கிராம்

4. உரித்த பூண்டு  6 பல் 

5.பச்சை மிளகாய் 4

6.நறுக்கிய பெரிய வெங்காயம் 1

7.கடலைப் பருப்பு (சன்னா டால்) 70 கிராம்

8.எள் 3 டீஸ்பூன் 

9.கறிவேப்பிலை 2 இணுக்கு 

10.ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி 

11.உப்பு தேவையான அளவு 

12.எண்ணெய் தேவையான அளவு 

13.தண்ணீர் தேவையான அளவு.

14.சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

கடலைப் பருப்பில் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். சுரைக்காயை தோல் சீவி நறுக்கி, விதைகளை நீக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு மசிய அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த சுரைக்காய் கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதனுடன் அரிசி மாவை சேர்க்கவும். பின் ஊறவைத்த கடலைப் பருப்பு, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பின் அதனுடன் கறிவேப்பிலை, கொத்த மல்லி இலைகளை போட்டு பிசையவும். அனைத்துப் பொருட்களும் ஒன்று சேர்ந்து, சப்பாத்தி மாவு பதம் வருமாறு, தேவைப்பட்டால் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடானதும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவவும்.

பின் பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு சிறிய சாத்துக்குடி சைஸ் மாவைப் பிய்த்தெடுத்து, கடாயின் நடுவில் வைத்து கைகளினால் அழுத்தி அடை அளவுக்கு பரத்தி விடவும். அந்த அடையின் மீது சிறிதளவு எள்ளை எடுத்து தூவிவிடவும்.

அடையை சுற்றிலும் ஸ்பூனினால் எண்ணெய்யை கொஞ்சம் தாராளமாக ஊற்றவும். ஒரு மூடி வைத்து மூடி  மிதமான தீயில் வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து அடையை திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் சிவக்க வெந்து, கிரிஸ்பியான டெக்ச்சர் வந்ததும் தட்டில் எடுத்து வைத்துப் பரிமாறவும். சுவை மிக்க தெலுங்கானா ஸ்பெஷல் லவுக்கி அடை தயார்! 

ஹம்முஸ் அல்லது சாஸ் தொட்டு காலை உணவாகவோ ஸ்னாக்ஸ்ஸாகவோ உட்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com