நம் இந்திய சமையல் உலக அளவில் விரும்பப்படுவதன் காரணமே நாம் அதில் சேர்க்கும் மருத்துவ குணங்கள் மிக்க மிளகு இஞ்சி பூண்டு பட்டை சோம்பு போன்ற மசாலாப் பொருட்கள்தான். இவை இயற்கையான மணம் சுவையை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் நமக்கு தருகிறது. இந்த மசாலாக்களை உணவில் தினம் பயன்படுத்துவது நல்லது. இதோ மசாலாக்கள் சேர்த்த சுவையான சேனைக்கிழங்கு வடகறி மற்றும் குடைமிளகாய் கிரேவி.
சேனைக்கிழங்கு வடை கறி
தேவையானவை:
சேனைக்கிழங்கு - 1 (சிறியது)
பூண்டு -5 பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்
சோம்பு - சிறிது
பட்டை ,லவங்கம், - தலா 2
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 1
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
துருவிய தேங்காய் - சிறிய கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சேனைக்கிழங்கை நன்கு மண் போக கழுவி மேல் தோல் நீக்கி சிறிது சுடு தண்ணீரில் போட்டு உடனே எடுத்து அதை துருவிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். துருவிய சேவையுடன் பொட்டுக்கடலை பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சேனைக்கிழங்கில் ஏற்கனவே ஈரமுள்ளதால் நீர் சேர்க்க வேண்டியது இல்லை. வாணலியில் தேங்காய் தேவையான எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிட்டு தேங்காய் பூண்டு இஞ்சி அரைத்து அதில் ஊற்றி கொதிந்து வந்ததும் அதில் சுட்டு வைத்த வடைகளை எடுத்துப்போட்டு மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். இது ஊத்தப்பம், கல்தோசைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
குடைமிளகாய் கிரேவி
தேவையானவை:
குடைமிளகாய் - 3 மீடியம் சைஸ் வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி - பத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் நறுக்கிய
வெங்காயம் - 2
தக்காளி - 3
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் வேர்க்கடலை முந்திரி இரண்டையும் வறுத்து மிக்ஸியில் இட்டு தூளாக்கிக் கொள்ளவும். அடுத்து அதிலேயே சிறிது எண்ணெய்விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய குடைமிளகாயை வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். அதன்பின் காய்ந்த எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்த்தூள் பொடியாக்கிய நிலக்கடலை பொடி, உப்பு சேர்த்துக்கிளறி தேவையான நீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து மசாலா வாசம் போய் சற்று கெட்டியானதும் இறக்கவும். இந்த குடை மிளகாய் கிரேவி சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கும்.