
நார்த்தங்காய் சீசன் இது. இந்த சமயத்தில் மருத்துவ குணம் நிறைந்த நார்த்தங்காய் கொண்டு உப்பு பிசறல், கொத்சு என செய்து சாப்பிட வாய்க்கு நன்றாக இருப்பதுடன் உடலுக்கும் ஆரோக்கியம் தருவதாக இருக்கும்.
பச்சை நார்த்தங்காய் பிசறல்:
நார்த்தங்காய் 10
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
ரொம்ப சிம்பிள். ஆனால் மிகுந்த மருத்துவ பலன் நிறைந்தது. நார்த்தங்காயை பொடி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசிறி வைக்கவும். தினமும் குலுக்கி விட நான்கே நாட்களில் நன்கு ஊறிவிடும். பிறகு வெயிலில் 4 நாட்கள் ஒரு தட்டில் வைத்து காய வைத்து எடுக்க மிகவும் அருமையான நார்த்தங்காய் பிசறல் தயார். எங்கள் மாமியார் இதனை வெயிலில் காய கூட வைக்க மாட்டார்கள். ஊறியதும் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
பச்சை நார்த்தங்காய் கொத்சு:
அறுசுவையும் கொண்ட பச்சை நார்த்தங்காய் கொத்சு இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு தோதாக இருக்கும் இந்த கொத்சு.
நார்த்தங்காய் 2
பச்சை மிளகாய் 4
புளி சிறிய நெல்லிக்காயளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
வெல்லம் 1 துண்டு
நார்த்தங்காயை பொடிப் பொடியாக நறுக்கி கொட்டைகளை நீக்கிவிட்டு வைக்கவும். பச்சை மிளகாயை மெல்லியதாக கீறி வைக்கவும். புளியை நீர்க்க கரைத்து வைக்கவும்.
வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள நார்த்தங்காய் துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். அப்போதுதான் சிறிதும் கசப்பே தெரியாது. நன்கு சுருள வதங்கியதும் புளிக்கரைசலை ஒரு கப் அளவில் விட்டு கொதிக்க விட்டு கெட்டியானதும் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்க உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு என அறுசுவையுடன் சூப்பரான நார்த்தங்காய் கொத்சு தயார்.