மழைக்காலத்தில் சளி, இருமல் என்று வந்து விட்டால் அனைவரும் விரும்புவது தூதுவளைக்கீரைப்பொடி, நெய்யில் வறுத்த அதன் கீரை மற்றும் குழம்பைதான். நாள்பட்ட சளியையும் கரைத்து நல்ல ஆரோக்கியத்தை தருவதில் தூதுவளை இலை பயன் சிறப்பானது.
தூதுவளை குழம்பு செய்முறை
செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தப்படுத்திய தூதுவளை இலை- இரண்டு கைப்பிடி
மிளகு ,சீரகப்பொடி தலா -ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்- 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக அரிந்தது- 15
பூண்டு உரித்து அரிந்தது- 15
புளி- சிறுநெல்லிக்காய் அளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
தூதுவளைக் கீரையை நன்றாக மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும் .புளியை கரைத்து வைத்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பொடித்து வைத்துள்ள தூதுவளைப்பொடி மற்றும் மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் ஒரு வதக்கு வதைக்கி புளி தண்ணீர்விட்டு உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும் கூடவே சளியும் வெளியேறும்.
வாழைக்காய் வறுவல்:
தேவையான பொருட்கள்:
அதிகம் முற்றாக வாழைக்காய்- மூன்று
மிளகாய் பொடி, சாம்பார் பொடி தலா- இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலை மாவு ,அரிசி மாவு தலா- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி இரண்டாக வெட்டவும். பின்னர் அதை நீள துண்டுகளாக அரியவும். அவற்றில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொடிகளையும் உப்பு சேர்த்து கலந்து நன்றாக தடவவும். வாழைக்காயில் இருக்கும் ஈரப்பதமே அதுக்கு போதுமானதாக இருக்கும் .அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருக்காது. தேவைப்பட்டால் லேசாக தெளித்து பிசறவும். அவற்றை கொதிக்கும் எண்ணெயில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்கவும்.
ஜவ்வரிசி வடை:
தேவையான பொருட்கள்:
பெரிய ஜவ்வரிசி -ஒரு கப்
பொடிதாக அரிந்த முட்டைக்கோஸ், கேரட் ,பீன்ஸ் ,தனியா, கருவேப்பிலை சேர்த்து -ஒரு கப்
அரிந்த பச்சை மிளகாய்- 3
உப்பு எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
ஜவ்வரிசியை நன்றாக 4 மணி நேரம் ஊறவிட வேண்டும். ஊறிய ஜவ்வரிசியுடன் அரிந்த காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசிறி கொதிக்கும் எண்ணெயில் தூவலாக விட வேண்டும். அவை எல்லாமாக சேர்ந்து வடை போல் வரும் அப்பொழுது திருப்பி போட்டு நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும். சூடாக சாப்பிட மொறு மொறு என்று இருக்கும். இது நீண்ட நேரம் கிரிஸ்பியாக இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பர். செய்வதும் எளிது ஜவ்வரிசி நன்றாக ஊற வேண்டும். சரியாக ஊறாமல் இருந்தால் வெடிக்கும்.