Sponge Cake என்பது உலகிலுள்ள எல்லா தரப்பு வயதினரும் விரும்பி உண்ணும் ஒரு ஸ்பெஷல் உணவாகும். இது மிருதுவாக பஞ்சு போல இருப்பதால், எல்லா தருணங்களிலும் சாப்பிட உகந்தது. இந்த சுவையான கேக் முதல் முதலில் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள மக்களின் விருப்ப உணவாகப் பார்க்கப்படுகிறது. சரி வாருங்கள் இந்த பதிவில் எப்படி மென்மையான ஸ்பான்ஜ் கேக் வீட்டிலேயே செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
முட்டை - 3
ரீபைண்ட் ஆயில் - ½ கப்
பால் - ½ கப்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாக கலந்து சலித்து எடுக்கவும். இப்படி செய்யும் போது மாவுகளுக்கு மத்தியில் காற்றோட்டம் நிறைந்து மென்மையாக இருக்க உதவும்.
மற்றொரு கிண்ணத்தில் முட்டைகள் மற்றும் அரைத்த சர்க்கரையை கலந்து நுரை வரும் அளவுக்கு பீட் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக பீட் செய்து பஞ்சு போல கொண்டு வர வேண்டும்.
பின்னர் அந்த முட்டை - சர்க்கரை கலவையில் ஏலக்காய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்குங்கள். அடுத்ததாக அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை சேர்த்து மென்மையாக இருக்கும் படி கலந்து கொள்ளவும். இந்த மாவு கெட்டியாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் கேட்கும் கெட்டியாக வரும்.
இந்த கலவையை கேக் பவுலில் வெண்ணை தடவி அதில் ஊற்றவும். மாவு எல்லா இடங்களிலும் சமமாக இருக்கும் படி சரி செய்யுங்கள். அனைத்தையும் சரி செய்ததும் கேக் பவுலை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் உயர் வெப்பத்தில் 5 நிமிடங்கள் வேக விடுங்கள்.
மைக்ரோவேவ் ஓவன் உள்ளே கேக் வேகும்போது உன்னிப்பாக கண்காணிக்கவும். கேக் முழுவதும் வெந்துவிட்டதா என்பதை சரிபார்க்க, அதன் மையத்தில் டூத் பிக் வைத்து குத்திப் பாருங்கள். மாவு டூத் பிக்கில் ஒட்டாமல் இருந்தால் கேக் தயாராகிவிட்டது என அர்த்தம். இல்லையெனில் மேலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
கேக் வெந்ததும் வெளியே எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் குளிரவிட்டால், மென்மையான ஸ்பான்ஜ் கேக் தயார். இதை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். அல்லது மேலே கிரீம் தடவி, பழங்கள் தூவி, நட்ஸ் சேர்த்து அலங்காரம் செய்தும் சாப்பிடலாம்.