
எப்போதுமே நமது வீடுகளில் டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி தான் செய்வோம். ஆனால் எப்போதுமே ஒரே மாதிரி செய்து சாப்பிட்டால் போர் அடிக்கும். குழந்தைகளும் இதை அதிகமாக விரும்பி சாப்பிடுவது குறைந்துவிடும். அதற்காகத்தான் நாம் விதவிதமாக சமைக்க வேண்டியது அவசியமாகிறது. முற்றிலும் புதுமையாக புதுப்புது உணவுப் பொருட்களை சேர்த்து, உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
ஆனால் வித்தியாசமாக என்ன செய்வது என உங்களுக்குத் தெரியவில்லையா? ஒருமுறை இந்த இலங்கையில் செய்யும் ரொட்டியைப் போல செய்து பாருங்கள். முற்றிலும் வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், வெங்காயம், துருவி தேங்காய், உப்பு, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து, மைதா மாவு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
பிசைந்த மாவை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையிலேயே மெதுவாகத் தட்டவும்.
பின்னர் தட்டிய மாவை தவாவை மிதமான தீயில் வைத்து அதன் மேல் வைத்து ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும். அதன் மீது கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் தடவினால் சுவையான இலங்கை போல் ரொட்டி தயார்.
இதை அப்படியே சாப்பிடலாம், அல்லது காரமான கிரேவி செய்து அதனுடன் தொட்டு சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.