
இன்றைக்கு ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் சம்பாரா தோசை மற்றும் சுண்டைக்காய் பகோடா ரெசிபியை சிம்பிளாக வீட்டிலே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
சம்பாரா தோசை செய்யத் தேவையான பொருட்கள்.
பச்சரிசி- 1 கப்.
உளுந்து- 1/2 கப்.
கல் உப்பு- தேவையான அளவு.
நெய்- 2 தேக்கரண்டி.
மிளகு- 1 தேக்கரண்டி.
சீரகம்- 1 தேக்கரண்டி.
சுக்குப்பொடி- 2 தேக்கரண்டி.
சம்பாரா தோசை செய்முறை விளக்கம்:
முதலில் 1 கப் பச்சரிசையை சுத்தம் செய்து நன்றாக ஊற வைக்கவும். அத்துடன் ½ கப் உளுந்தையும் 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது கிரைண்டரில் முதலில் உளுந்து போட்டு பாதி அரைப்பட்டதும் அடுத்து அரிசியை போட்டு அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக மாவை அரைத்து எடுத்துக்கொண்டு கல் உப்பு தேவையான அளவு சேர்த்து இரவு ஊற வைத்து விடவும்.
தோசை ஊற்றுவதற்கு முன் கடாயில் 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதையும் மாவுடன் சேர்த்துக்கொண்டு வறுத்து பொடி செய்த சுக்கு 2 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும். இப்போது இதை ஆப்பக் கடாய் அல்லது தோசை தவாவில் 2 அல்லது 3 கரண்டி மாவை ஊற்றி மூடிப்போட்டு வேக வைத்து எடுத்தால் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் சம்பாரா தோசை தயார்.
இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சுண்டைக்காய் பகோடா செய்யத் தேவையான பொருட்கள்:
கடலை மாவு-1/4 கிலோ.
சுண்டைக்காய்-1/4 கிலோ.
கடலை எண்ணெய்-1/2 லிட்டர்
பூண்டு-7.
சோம்பு-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-6
பெருங்காயம்-சிறுதுண்டு.
இஞ்சி-சிறுதுண்டு.
உப்பு-தேவையான அளவு.
சுண்டைக்காய் பகோடா செய்முறை விளக்கம்:
முதலில் சுண்டைக்காய் ¼ கிலோவை நறுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு அலசி வைத்துக்கொள்ளவும். சோம்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 6 நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது இஞ்சி சிறுதுண்டு, பெருங்காயம் சிறுதுண்டு, பூண்டு 7 ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவு ¼ கிலோவை சேர்த்து அதில் அரைத்து வைத்த இரு கலவைகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சுண்டைக்காயை சேர்த்துவிட்டு தண்ணீர் சிறிதளவு விட்டு பகோடா மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.
கடாயில் கடலை எண்ணெய்யை ஊற்றி நன்றாக சூடானதும் மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறு சுண்டைக்காய் பகோடா தயார்.