
பாயசங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் வித்தியாசமான சிலவற்றைப் பார்ப்போம்.
கடலை மாவு திடீர் பாயசம்
தேவை:
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
பசும்பால் -1 கப்
சர்க்கரை - அரை கப்
நெய்யில் வறுத்த முந்திரி - 10
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை;
வாணலியில் நெய் விட்டு கடலைமாவை வாசம் வரும் வரை வறுக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் வறுத்த கடலை மாவு, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய் தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து இறக்கி வைத்தால், சுவை, மணம் கொண்ட இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி.
துளசி பாயசம்
தேவை:
துளசி விதைகள் - 2 ஸ்பூன்
பனங்கற்கண்டு - 6 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் ஒரு கப்
செய்முறை:
ஒரு மண் பானையில் துளசி விதைகள், பனங்கற்கண்டு, தண்ணீர் மூன்றையும் ஊற்றி, முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலை அது பாயாசம்போல ஆகிவிடுவதால், இது துளசி பாயாசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாயசம், வயிற்றுக்கடுப்பு, மூல வியாதிகளுக்கு அருமருந்தாக செயல்படுகிறது.
கருப்பு கவுனி அரிசி பாயசம்
தேவை:
கருப்பு கவுனி அரிசி - அரை கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை முதல் நாள் இரவு நீரில் ஊறவைக்கவும். காலையில் நீரை வடித்துவிட்டு, வேறு நீரில் வேக வைக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதில் சேர்க்கவும். நெய், ஏலக்காய் தூள் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். சுவையான, சத்தான கருப்பு கவுனி பாயசம் ரெடி.
மாம்பழ பாயசம்
தேவை:
பெரிய, இனிப்பான மாம்பழம் - 1
வெல்ல பொடி - அரை கப்
பால் -1 கப்
நெய் - ஒரு ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிது.
செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். வாணலியில் நெய் விட்டு, மாம்பழத் தூண்டுகளை வதக்கி பால் சேர்க்கவும். கொதித்து இரண்டும் இணைந்ததும், வெல்லப் பொடி, ஏலக்காய் தூள் போட்டு இறக்கி வைத்தால் சுவையான மாம்பழ பாயசம் தயார். மாம்பழ சீசனில் இதை செய்து ரசித்து, ருசிக்கலாமே.