
கறிவேப்பிலை, கொத்தமல்லி மலிவாக கிடைக்கும் சமயங்களில் வெயிலில் காயவைத்து, ரசப்பொடியுடன் கலந்துவைத்துக்கொண்டால், கறிவேப்பிலை, கொத்தமல்லி இல்லாத சமயத்திலும் ரசம் கம கமக்கும்.
பாயசத்தில் முந்திரியை வறுத்துப்போடும்போது சில சமயம் கருகி விடும். நேரமானால் நமத்தும்விடும். இதைத் தவிர்க்க ஒரு கரண்டி பாயசத்தை எடுத்து, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு, மிக்ஸியில் அரைத்து பாயசத்தில் சேர்த்துவிட்டால் சுவை கூடும்.
பாலுக்கு உறைமோர் இல்லாவிட்டால் ஒரு பச்சை மிளகாய் காம்பை கிள்ளிப்போட்டால் கெட்டித்தயிர் தயாராகிவிடும்.
பலகாரம் செய்த பிறகு மீதமாகும் எண்ணையில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் ஆறு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழ கொழ வென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து, பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து இனிப்பு பூரிகளோ, இனிப்பு சப்பாத்திகளோ தயாரித்து விடலாம். அல்லது பாலுடன் மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்யலாம்.
தோசை மாவு எளிதில் புளிக்காமல் இருக்க வேண்டுமா? மீதமுள்ள அந்த மாவிற்குள் ஒரு நீளமான பச்சை மிளகாயை கீறிப்போட்டு வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில் புளிப்பு சுவை அதிகம் இருக்காது.
பிரட் துண்டுகளுக்கு இடையில் காய்கறிக் கலவையை வைத்து சான்ட்விச் தயாரிக்கும்போது கத்தியால் ஷார்ப்பாக துண்டு போட முடியாது. இதைத் தவிர்க்க பிரட்டை இரண்டு அல்லது நான்கு துண்டுளாக கட் செயவதற்கு முன் கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து செய்தால் எளிதாக துண்டுபோட வரும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாக இருக்கும்.
இட்லி மாவு, தோசைமாவு பொங்காமல் இருக்க வாழை யிலையைப் போட்டு மூடிவைக்க வேண்டும்.
இஞ்சியைத் துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாது.
சிறிது உப்பு கரைத்த நீரில் தக்காளியைப் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாது.