சூப்பர் சுவையில் 3 சைட் டிஷ்கள்! செய்வது இவ்வளவு ஈஸியா?

Summer Recipes
Summer Recipes

1. புளியம்பூ சட்னி:

Puliyam Poo Chutney
Puliyam Poo ChutneyImg Credit: Divyaprathee-Jewellery, B

தேவையான பொருட்கள்:

புளியம் பூ 1 கிண்ணம்.

உப்பு சிறிது.

மிளகாய் 6.

தேங்காய் துருவல் 1/2 கப்.

பூண்டு 4.

சின்ன வெங்காயம் 10.

கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

மிக்ஸியில் புளியம்பூ, மிளகாய், உப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் தெளித்து அரைக்கவும். நொடியில் சட்னி தயார்.

இதனை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். புளிப்புச் சுவை, கார்ப்பு சுவை இரண்டும் சேர்ந்த கலவை இந்த புளியம்பூ.

புளியம்பூ பித்தம், கபம், சளியை போக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல பலனைத் தரும். ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். நாவின் சுவையின்மையை போக்கும்.

2. துருவிய மாங்காய் தொக்கு:

Mango thokku
Mango thokkuImg Credit: The chief and her kitchen

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

காரப் பொடி - 2 ஸ்பூன்

பெருங்காய பொடி - 1/2 ஸ்பூன்

வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்

வெல்லம் - நெல்லிக்காய் அளவு

தாளிக்க கடுகு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாங்காயை நன்கு கழுவி துடைத்து துருவிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் வெந்தய பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து துருவிய மாங்காயையும் போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டை போட்டு மூடி இரண்டு நிமிடம் வேக விடவும். பிறகு காரப்பொடி, நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கிளறவும். 

நன்கு சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து ஆற விடவும். இதனை பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஈரமில்லாத ஸ்பூன் கொண்டு தொக்கை எடுத்து பயன்படுத்த ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

இந்த தொக்கை தயிர் சாதம் மட்டுமல்லாமல் வெரைட்டி ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

அலாதியான சுவை கொண்ட இந்த தொக்கை செய்து தான் பாருங்களேன்!

இதையும் படியுங்கள்:
தஞ்சாவூர் ஸ்பெஷல் ‘தக்காளி ஜாம்’ ஜம்முனு செய்யலாம் வாங்க!
Summer Recipes

3. வெங்காய கிள்ளு வடகம்:

Onion Vadagam
Onion VadagamImg Credit: Sri varaha foods

வெயில் தொடங்கியாச்சு. இனி வருடம் முழுவதற்கும் தேவையான வடாம் வத்தல் போடும் வேலையை ஆரம்பித்து விடலாம். மழைக்காலங்களிலும், காய்கறிகள் இருப்பு இல்லாத சமயங்களிலும் வடகத்தை பொரித்து சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிடலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ

ஜவ்வரிசி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 15 

உப்பு - தேவையான அளவு 

எலுமிச்சம்பழம் - 1

சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

செய்முறை:

சின்ன வெங்காயத்திற்கு ருசி அதிகம். உரிக்க கஷ்டமாக இருந்தால் பெரிய வெங்காயத்தை பயன்படுத்தவும்.

பச்சரிசி, ஜவ்வரிசி (4:1) இரண்டையும் மிஷினில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். 

ஒரு பெரிய அடுக்கு அல்லது ஏழரை லிட்டர் குக்கரில் பாதி அளவு தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து அந்த விழுதை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவை போட்டு அடிபிடிக்காமல் நிதானமாக கிளறவும். மாவு நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கிளறி எலுமிச்சை பழ ஜூஸை சேர்த்து கலந்து விட்டால் வடகம் போட மாவு ரெடி.

கை பொறுக்கும் சூட்டிற்க்கு வந்தவுடன் மாடியில் பிளாஸ்டிக் சீட்டை (அல்லது) காட்டன் துணியை விரித்து கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி வைக்கவும். நான்கு நாட்களில் நன்கு காய்ந்து விடும் இந்த வெங்காய வடகம். பிறகு ஈரம் படாத, காற்று புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும். தேவைப்படும் சமயம் எண்ணெயில் பொரித்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com