
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த தயிர் பச்சடிகள் உதவும். இதனை தினமும் துவையல் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.
புடலங்காய் இஞ்சி பச்சடி:
புடலங்காய் துருவியது 1/2 கப்
இஞ்சி துருவல் சிறிது
கெட்டி தயிர் 1 கப்
உப்பு சிறிது
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
பச்சை மிளகாய் 2
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்
புடலங்காயை கழுவி துருவி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் துருவிய புடலங்காய், இஞ்சி துருவல் சேர்த்து சிறிது உப்பு, 1/2 ஸ்பூன் சர்க்கரை (நிறம் மாறாமல் இருக்க) சேர்த்து தட்டை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் வைக்கவும். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு அதிகம் புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி கலந்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி:
கத்தரிக்காய் 1 பெரிது
கெட்டி தயிர் 1கப்
பச்சை மிளகாய் 2
உப்பு சிறிது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் கறிவேப்பிலை
கத்திரிக்காயை கழுவி துடைத்து சிறிது எண்ணெய் தடவி கேஸ் அடுப்பை சிம்மில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி விட்டு நன்கு சுட்டு எடுக்கவும். சுட்ட கத்திரிக்காயை நீரில் போட்டு கருகிய மேல் தோல்களை எடுத்துவிட்டு நன்கு மசிக்கவும். அத்துடன் உப்பு, அதிகம் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்க்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் தயிர் பச்சடியில் கலக்கவும். மிகவும் ருசியான தயிர் பச்சடி தயார்.
கலந்த சாதம், சப்பாத்தி, பூரி, அடை, தோசை என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
நாகர்கோவில் கல்யாண வீட்டு பச்சடி:
வெள்ளரிக்காய் 1
கெட்டி தயிர் 1 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
பச்சை மிளகாய் 1
இஞ்சி சிறு துண்டு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை
வெள்ளரிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். அதனை உப்பு, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வெள்ளரிக்காய் முக்கால் பதம் வெந்ததும் அரைத்ததை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெள்ளரிக்காயில் போடவும். நன்கு ஆறியதும் அதில் கெட்டி தயிரை கலந்து பரிமாற மிகவும் ருசியான கல்யாண வீட்டு பச்சடி தயார்.
வெண்டைக்காய் பச்சடி:
வெண்டைக்காய் 10
கெட்டி தயிர் 1 கப்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு சிறிது
கொத்தமல்லி சிறிது
தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை
வெண்டைக்காயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெண்டைக்காயை போட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தட்டை போட்டு மூடி வேகவிடவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து அதிகம் புளிப்பில்லாத கெட்டி தயிரில் கலந்து சூடு ஆறியதும் வதக்கிய வெண்டைக்காயையும் சேர்த்து கலந்து பரிமாற மிகவும் ருசியான வெண்டைக்காய் தயிர் பச்சடி தயார்.