
வெயில் காலத்தில் காபி டீக்கு பதிலாக உடலுக்கு உற்சாகம் தரும் இந்த பானங்களை அருந்த வெயிலால் ஏற்படும் களைப்பு போய்விடும்.
புளியங்காய் பானம்:
புளியங்காய் 1 கொத்து
இஞ்சி 1 துண்டு
ஏலக்காய் 2
நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப
புளியங்காயை தோல் மற்றும் கொட்டையை எடுத்துவிட்டு இஞ்சி ஒரு துண்டு, ஏலக்காய் 2 சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். அதனுடன் ஒன்றுக்கு பத்து மடங்கு அளவில் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். ஆறியதும் நாட்டுச் சர்க்கரை தேவைக்கேற்ப கலந்து பருக ருசியுடன் தாகம் தணிக்கும் பானம் தயார்.
வில்வ இலை பானம்:
வில்வ இலைகள் ஒரு கப்
தண்ணீர் 20 கப்
வில்வ இலைகளை பறித்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இருப்பது மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஆறவிடவும். தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிநீருக்கு பதிலாக கால் கப் இந்த பானத்துடன் முக்கால் கப் தண்ணீர் கலந்து பருக தாகம் தணிவதுடன் உடலும் குளிர்ச்சி பெறும்.
வெட்டிவேர் பானம்:
வெட்டிவேர் ஒரு கப்
தண்ணீர் 20 மடங்கு
சுத்தப்படுத்தப்பட்ட வெட்டிவேரை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி அத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு ஆறியதும் அதில் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்கு பதிலாக கால் கப் வெட்டிவேர் தண்ணீர் மற்றும் முக்கால் கப் தண்ணீர் கலந்து பருக தாகம் தணிவதுடன் உடலுக்கும் குளிர்ச்சி தரும். வெயிலால் உண்டாகும் வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்ற உபாதைகள் நீங்கும்.
சுக்கு சீரக பானம்:
சுக்கு ஒரு துண்டு
சீரகம் ஒரு ஸ்பூன்
தண்ணீர் 20 கப்
சீர் + அகம். அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர். சுக்கை பொடித்து மேல் தோலை நீக்கிவிடவும். தண்ணீரில் சுக்குப்பொடி, சீரகம் ஒரு ஸ்பூன் கலந்து கொதிக்கவிட்டு ஆறியதும் பருக வெயிலுக்கு இதமான உடலுக்கு ஏற்ற பானமாக இருக்கும்.