தினசரி ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக பன்னீர் புலாவ் முயற்சித்துப் பாருங்கள். பொதுவாகவே புலாவ் உணவுகளில் அதிக மசாலாக்கள் இருக்காது. இதனால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக பன்னீர் சேர்த்து செய்யப்படும் புலாவ் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இதன் சுவையும் சூப்பராக இருக்கும் என்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் பன்னீர் புலாவ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1 பாக்கெட்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய் - 1
வெங்காயம் - 1
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பீன்ஸ் - 7
கேரட் - 1
முந்திரி - 5
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்கறிகள் மற்றும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் பன்னீரில் சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் ஊறியதும், லேசாகப் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, சீரகம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்குங்கள். அதன் பின்னர் கரம் மசாலா மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
அதன்பிறகு பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து, இரண்டு விசில் விட்டு இறக்கிவிடவும்.
இறுதியாக குக்கரைத் திறந்து அதில் முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித் தழை, பன்னீர் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து அப்படியே கலந்துவிட்டால் சுவையான பன்னீர் புலாவ் தயார்.