நம்மை நாமே நேசிப்பது என்ற வார்த்தை கேட்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் அதை செய்வது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும். நம்மை நாம் விரும்புவதற்கு பல விஷயங்கள் தடையாக அமைகிறது. அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தாலே வாழ்க்கை சிறப்பானதாக மாறும். எனவே இந்த பதிவில் உங்களது சுயமதிப்பைத் தீர்மானிக்காத 6 விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
1. சாதனைகள்: நம்மில் பலருக்கு வாழ்வில் எதையாவது சாதித்தால் மட்டுமே நாம் சிறப்பானவர் என்ற பிம்பம் இருக்கும். ஆனால் அது முற்றிலும் பொய்யானது. உங்களுடைய சாதனைகள் உங்களுடைய தகுதியைக் குறிப்பதல்ல. உண்மையிலேயே இந்த கால சாதனைகள், தன் மகிழ்ச்சிக்காக செய்யப்படுவதில்லை. பிறர் தன்னை சிறப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. அது ஒருபோதும் உங்களுடைய சுயமதிப்பை உயர்த்தாது. நீங்கள் எத்தகைய நபர்? பிறரிடம் எப்படி பழகுகிறீர்கள்? எப்படி செயல்படுகிறீர்கள்? என்பதே உங்களது சுயமதிப்பை வெளிப்படுத்தும்.
2. வேலை மற்றும் வருமானம்: வேலை தான் கெத்து, வருமானம் தான் சுயமதிப்பை முடிவு செய்கிறது என நினைக்கும் நபரா நீங்கள்? என்னதான் இவை உங்களது வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அங்கம் வகித்தாலும், உங்களுக்கான சுயமதிப்பை வேலையோ அல்லது வருமானமோ முடிவு செய்வதில்லை. பணம் குறைவாக வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்ற பிம்பம் உலகில் உள்ளது. ஆனால் நாம் எதுபோன்ற வேலை செய்கிறோம், எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முழுவதும் நாம் இருக்கும் இடம், நம்முடைய தேவைகளைப் பொறுத்து அமைகிறது. இப்படி பிற காரணிகளால் நாம் தேர்வு செய்யும் விஷயங்கள், நம்முடைய சுயமதிப்பாக இருக்காது.
3. சிறுவயது: சிறுவயதில் நடந்த மோசமான விஷயங்கள் தான் இப்போது ஒருவர் நல்ல நிலையில் இல்லாமல் போவதற்கு காரணம் என பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதை ஒருபோதும் தற்போதைய நிலைக்குக் காரணமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது சிறுவயதில் நம்முடைய பெரும்பாலான முடிவுகளை பெற்றோர்களே எடுக்கிறார்கள். உங்களது செயல்பாடுகள் அனைத்தையும் அவர்களே கண்ட்ரோல் செய்கிறார்கள். எனவே அதற்கு நீங்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லை என்பதால், உங்கள் வாழ்க்கை இப்போது மோசமாகிவிட்டது என சொல்வதில் அர்த்தமில்லை.
4. கல்வி: நம்மில் பலர் படிப்பு தான் நம்முடைய சுயமதிப்பை வெளிப்படுத்துகிறது என நினைக்கிறேன். ஆனால் நம்முடைய படிப்பையும் முழுவதும் கண்ட்ரோல் செய்வது பெற்றோர்களே. நீங்கள் எங்கே படிக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என எல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கிறார்கள். எனவே நீங்கள் படித்தால் மட்டும்தான் சிறப்பாக இருக்க முடியும் என அர்த்தமில்லை. படிப்பு முக்கியம்தான் ஆனால் படிப்பு மட்டும் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு முற்றிலும் தவறு.
5. பிறரது சாதனைகள்: பிறர் என்னவெல்லாம் சாதித்துள்ளார்களோ அதை நீங்களும் சாதிக்க வேண்டும் என்பது உங்களின் உண்மையான தகுதி இல்லை. எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரைப் பார்த்து நீங்கள் செய்ய முயற்சித்தால், எதுவுமே சாதிக்க முடியாது. பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களால் கட்டுப்படுத்தி செயல்படுத்த முடியும். எனவே ஒருபோதும் பிறரை உங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைப் போல சாதிப்பதுதான் உங்களின் மதிப்பு என தவறாக நினைக்காதீர்கள்.
6. வெளித்தோற்றம்: அழகாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை சாதிக்க முடியும் என்ற நிலைப்பாடு பலருக்கு உள்ளது. இதற்காக தங்களைத் தாங்களே தாழ்வு மனப்பான்மையில் தள்ளிக்கொண்டு வாழ்வில் முன்னேறாமல் இருக்கின்றனர். அழகு உங்களுக்கு அனைத்தையும் பெற்று தரும் என்பது சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படும் ஒன்றாகும். ஆனால் உண்மையில் உங்களுடைய திறமை மற்றும் உழைப்பு மூலமாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் சுயமதிப்பு என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள், உங்களுடைய தகுதியை நிர்ணயம் செய்வதில்லை. எது உங்கள் தகுதியை நிர்ணயம் செய்கிறதென்றால், உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் விஷயங்கள்தான். எனவே தேவையில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டு, வாழ்க்கையில் ஏதோ ஒரு திசையில் மகிழ்ச்சியை நோக்கி பயணிப்பதை நிறுத்துங்கள். மகிழ்ச்சி உங்களின் எண்ணங்களிலேயே இருக்கிறது.